Published : 14 Dec 2013 10:26 AM
Last Updated : 14 Dec 2013 10:26 AM

தனியார் நிகழ்ச்சியால் பாழான ஹேண்ட்பால் மைதானம்

காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியால் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் உள்ள ஹேண்ட்பால் மைதானம் பாழாகியிருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கு வளாகத்தில் 2008-ல் ஹேண்ட்பால் மைதானம் அமைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஹேண்ட்பால் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காகவும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் நோக்கிலும் இந்த மைதானம் உருவாக்கப்பட்டது. கடந்த நவம்பர் 22-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற காக்னிசன்ட் நிறுவன ஆண்டு விழா நிகழ்ச்சியால் இந்த ஹேண்ட்பால் மைதானம் சேதமடைந்திருக்கிறது.

இரும்புக் கூடாரம்

ஆண்டு விழா நிகழ்ச்சி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றாலும்கூட, அதில் பங்கேற்றவர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக ஹேண்ட்பால் மைதானத்தில் இரும்புத் தூண்கள் உதவியுடன் பிரம்மாண்டான “செட்” அமைத்திருந்தனர். இரும்புத் தூண்களை நிறுத்துவதற்காக மைதானத்தில் குழி தோண்டியதோடு, அங்கிருந்த ஹேண்ட்பால் கோல் கம்பங்களையும் வளைத்து விட்டனர்.

நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளில் மைதானம் முழுவதும் உணவுக் கழிவுகளும், குப்பைகளுமாகக் காட்சியளித்துள்ளன. அது இன்னும் சரி செய்யப்படாததால் இன்று வரை பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஹேண்ட்பால் வீராங்கனைகள் தவிக்கிறார்கள்.

கோல் கம்பம் சேதம்

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஹேண்ட்பால் வீராங்கனை ஒருவர் கூறுகையில், “மைதானம் முழுவதும் குப்பைகள் காணப்பட்டதோடு, துர்நாற்றமும் வீசியது. அடுத்த சில தினங்களில் மழை பெய்ததால் மைதானத்தில் இருந்த கழிவுகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன. சென்னையில் இருக்கும் ஒரே ஹேண்ட்பால் மைதானம் இதுதான். உள்விளையாட்டரங்கில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் நாங்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமாக இங்கு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறும்போது அதில் கலந்துகொள்ள வருபவர்கள் எங்களுடைய மைதானத்தில் காரை நிறுத்தி சேதப்படுத்துவார்கள். ஆனால் இந்த முறை குழி தோண்டி “செட்” அமைத்ததோடு, கோல் கம்பங்களையும் சேதப்படுத்திவிட்டனர். இதனால் நாங்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இங்கு தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மைதானம் சேதம் அடையாமல் இருக்கவும், எங்களின் பயிற்சி பாதிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு” என்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அலுவலர் ஒருவர் கூறுகையில், “எஸ்டிஏடி விளையாட்டு விடுதிக்கான ஹேண்ட்பால் அணி தேர்வு முகாமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கு வளாகத்தில் உள்ள ஹேண்ட்பால் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அந்த சமயத்தில் உள்விளையாட்டரங்கில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றதால், அணி தேர்வு முகாம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எஸ்டிஏடி தேர்வு முகாமுக்கே அனுமதி மறுக்கப்படும்போது, ஹேண்ட்பால் வீராங்கனைகளால் என்ன செய்ய முடியும்” என கேள்வியெழுப்பினார்.

வேதனையளிக்கிறது

தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க பொதுச் செயலர் சரவணனிடம் இது குறித்து கேட்டபோது, “2008-ல் ரூ.6.5 லட்சம் செலவு செய்து இந்த மைதானத்தை அமைத்தோம். உள்விளையாட்டரங்கில் அரசு மகளிர் சிறப்பு விளையாட்டு விடுதி அமைக்கப்பட்ட பிறகு ஹேண்ட்பால் வீரர்கள் இங்கு வந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. வீராங்கனைகள் மட்டுமே இங்குள்ள ஹேண்ட்பால் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஏராளமான ஆண்கள் வருகிறார்கள்.

ஆனால் ஹேண்ட்பால் வீரர்கள் இங்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநபர்கள் இங்கு அனுமதிக்கப்படுகிறபோது, எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படாதது வேதனையளிக்கிறது. இப்போது எங்களின் மைதானமும் சிதைந்து போய் இருக்கிறது. இது தொடர்பாக மைதான அதிகாரியிடம் புகார் செய்திருக்கிறேன். காக்னிசன்ட் நிறுவனத்திடம் சொல்லி அதை சரி செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். சரி செய்யப்படும் வரை பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

நேரு உள்விளையாட்டரங்கு அதிகாரியிடம் கேட்டபோது, “ஹேண்ட்பால் மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்து தருமாறு காக்னிசன்ட் நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக தொடங்கப்பட்ட நேரு உள்விளையாட்டரங்கில் இப்போது பெரும்பாலும் விளையாட்டு அல்லாத நிகழ்ச்சிகளே அதிகமாக நடத்தப்படுகின்றன. இதனால் அந்த மைதானம் அமைக்கப்பட்ட நோக்கம் திசைமாறிப் போய் இருக்கிறது.

நேரு உள்விளையாட்டரங்கு மற்றும் நேரு மைதானங்களில் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படுவதாக வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். ஹேண்ட்பால் கோர்ட் போன்ற மைதானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் பயிற்சி மேற்கொள்வது பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். விளையாட்டுத் துறையில் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டி வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

இனி அனுமதி கிடையாது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ராஜாராமனிடம் கேட்டபோது, “இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் ஹேண்ட்பால் கோர்ட்டில் எவ்வித நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது” என்றார்.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக தொடங்கப்பட்ட நேரு உள்விளையாட்டரங்கில் இப்போது பெரும்பாலும் விளையாட்டு அல்லாத நிகழ்ச்சிகளே அதிகமாக நடத்தப்படுகின்றன. இதனால் அந்த மைதானம் அமைக்கப்பட்ட நோக்கம் திசைமாறிப் போயிருக்கிறது.

ஹேண்ட்பால் மைதானத்தில் இரும்புத் தூண்களால் கூடாரம் அமைக்கப்பட்ட காட்சி. சேதமடைந்த கோல் கம்பங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x