Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இன்று தொடங்குகிறது. உலகின் பலம் வாய்ந்த 32 அணிகள் களத்தில் மோதிக் கொள்ளவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் கலந்து கொள்கிறார். 600-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டப்படுத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.
12 நகரங்கள்
64 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் பிரேசிலின் வீதிகளெல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலீசா, பீலோ ஹரிஸான்டே, சல்வடார், கியூயாபா, போர்ட்டோ அலெக்ரே, ரெசிபே, மனாஸ், நேட்டல், கியூரிட்டிபா ஆகிய 12 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
பிரேசிலுக்கு வாய்ப்பு
தென் அமெரிக்க கண்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த அணிகளே வாகை சூடியுள்ளன. அதனால் வழக்கம் போல் இந்த முறையும் தங்கள் கண்டத்தைச் சேர்ந்த அணியே உலக சாம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பில் தென் அமெரிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தாய் மண்ணில் விளையாடுவதும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் பிரேசிலுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெய்மர் உள்ளிட்ட பலம் வாய்ந்த முன்கள வீரர்களைக் கொண்டுள்ள பிரேசில் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடர்ந்து 20-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒரே அணியான பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டீனா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலில் வீசும் காற்றில் கடுமையான ஈரப்பதம் இருக்கும் என்பதால் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். எனவே அவர்களுக்கு பிரேசிலில் கடும் சவால் காத்திருக்கிறது. உருகுவே, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய அணிகளும் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியளிக்கக்கூடிய பலம் வாய்ந்த அணிகளாகும்.
வரலாற்றை மாற்றுமா ஸ்பெயின்?
கடந்த உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த முறையும் இடம்பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ஆனால் தென் அமெரிக்க மண்ணில்
இதுவரை ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியதில்லை என்பதால் ஸ்பெயின் கோப்பையை தக்கவைத்துக் கொள்வது கடினம். ஒருவேளை ஸ்பெயின் மீண்டும் சாம்பியன் ஆனால், இனி வரும் காலங்களில் ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் பரந்துவிரியும் என கால்பந்து ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே ஸ்பெயின் அணி வரலாற்றை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோல் லைன் தொழில்நுட்பம்
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறைாக கோல் லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக இருகோல் கம்பங்களிலும் தலா 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கேமராக்கள் ஒரு விநாடியில் 500 படங்களை எடுக்கக்கூடியவை.
கோல் கம்பத்தை நோக்கியடிக்கப்படும் பந்து, கோல் எல்லையைக் கடந்ததும் கோல் லைன் தொழில்நுட்பத்தின் மூலம் நடுவருக்கு தகவல் கிடைத்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT