Published : 04 Nov 2013 08:54 PM
Last Updated : 04 Nov 2013 08:54 PM
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள சச்சின் டெண்டுல்கருக்காக வியத்தகு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம்.
ஆனால், அந்த ஏற்பாடுகளைக் கண்டு, கடும் அதிருப்தியிலும், சற்றே கோபத்திலும் இருக்கிறார், சச்சின் டெண்டுல்கர்.
இது தொடர்பாக சச்சின் குறிப்பிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறியது: "நான் விளையாட்டை விட மேலானவன் கிடையாது. இங்கு நான் மட்டுமே இல்லை; என்னோடு இந்திய அணியில் 14 பேர் இருக்கிறார்கள்" என்றார் சச்சின்.
கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி தொடரும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் புதன்கிழமை ஈடன் கார்டனில் தொடங்குகிறது. இது, சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டி.
சச்சினால் மறக்க முடியாத வகையில் இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்ட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம், பல நாட்களாக அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியது.
ஈடன் கார்டன் மைதானத்தில் திரும்பிய திசையெல்லாம் சச்சினை வரவேற்கும் வகையில் அவருடைய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சச்சினின் துல்லியமான உருவ அளவிலான மெழுகுச் சிலை ஒன்று வீரர்களின் டிரெஸ்ஸிங் அறை முன்பு நிறுவப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்திலும் சச்சினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் மைதானத்திற்கு வரும் 70 ஆயிரம் ரசிர்களுக்கும் விழா மலருடன் சச்சினின் மாஸ்க் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியின் 3-வது நாளில் சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டியை குறிக்கும் வகையில் 199 பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.
அதைத்தொடர்ந்து 4-வது நாளில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று சச்சினை பாராட்டவிருக்கிறார். 5-வது நாள் போட்டியின்போது சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டியை குறிக்கும் வகையில் ஈடன் கார்டன் மைதானத்தில் விமானங்கள் மூலம் 199 ரோஜா பூக்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT