Last Updated : 03 Feb, 2014 12:57 PM

 

Published : 03 Feb 2014 12:57 PM
Last Updated : 03 Feb 2014 12:57 PM

நியூஸிலாந்தில் இந்திய அணி - சீறி வரும் சவால்கள்

முதலிடத்தில் இருக்கும் அணியும் எட்டாம் இடத்தில் இருக்கும் அணியும் மோதினால் அதைச் சமமற்ற போட்டி என்றுதானே கருத முடியும்? ஆனால் முதலிடத்தில் இருந்த இந்தியாவுக்கும் எட்டாவது இடத்தில் இருந்த நியூஸிலாந்துக்கும் இடையே ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தப் போட்டி சமமற்ற போட்டியாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

காரணம், ஆட்டம் நடக்குமிடம் நியூஸிலாந்து. வேகப்பந்துக்குத் தோதான ஆடுகளங்கள் கொண்ட இடம். பந்துகள் சீறி எழும் களங்கள் மட்டுமின்றி, இங்கு வீசும் காற்றும் கடும் சவாலாக இருக்கும். இந்த இடத்தில் இளம் இந்திய அணி எப்படி ஆடப்போகிறது, முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்னும் கேள்விகள் எழுந்தன.

முதல் ஆட்டத்திலேயே இதற்கான பதில் கிடைத்துவிட்டது. அடுத்தடுத்த ஆட்டங்களில் அது உறுதிப்பட்டது. எகிறும் பந்துகளை ஆடும் திறனிலும் ஆட முடியாத விதத்தில் அப்படிப்பட்ட பந்துகளைப் போடும் திறனிலும் இன்றைய இந்திய அணி இன்னமும் தேர்ச்சிபெறவில்லை என்பதை இந்தத் தொடர் காட்டிவிட்டது.

விராட் கோலியைத் தவிர வேறு யாருமே மட்டை வீச்சில் வலுவாக வெளிப்படவில்லை. புவனேஸ்வர் குமாரைத் தவிர இதர வேகப் பந்து வீச்சாளர்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 4-0 என்னும் கணக்கில் தோற்றுப்போய் ஒருநாள் போட்டிகளில் இரண்டாம் இடத்திற்கு இறங்கிய இந்திய அணி 6ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் என்ன செய்யப்போகிறது என்னும் கேள்வி எழுகிறது.

நியூஸிலாந்து ஆடுகளங்கள் அளவில் சிறியவை. எளிதில் சிக்ஸர் அடிக்கத் தோதானவை. ஐ.பி.எல். போட்டிகளில் சிக்ஸர் மழை பொழியும் சில மட்டைகள் நியூஸிலாந்துக்கும் சென்றிருந்தன. ஆனால் அந்த மட்டைகளிலிருந்து சிக்ஸர்கள் பறக்கவில்லை. தடுமாறி அடிக்கப்பட்ட ஹூக் ஷாட், எக்குத்தப்பாக விளிம்பில் பட்டுத் தெறிக்கும் புல் ஷாட், முறையாக அடிக்கப்படாமல் கேட்சாக மாறிய ட்ரைவ்கள் ஆகியவைதான் அதிகம் பிறந்தன.

விராட் கோலியைத் தவிர முதல் நிலை மட்டையாளர்கள் யாருமே முத்திரை பதிக்கவில்லை. நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் அனைவரும் திட்டமிட்டபடி எகிறு பந்துகளைச் சரமாரியாகப் போட்டார்கள். ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகிய யாருமே அந்தப் பந்துகளை முறையாக ஆடவில்லை.

ஹூக் ஷாட் என்பது கழுத்துக்கு மேல் வரும் பந்தைச் சரியான நேரத்தில் எதிர்கொண்டு பந்தின் வேகத்தையே பயன்படுத்தி திசை திருப்புவது. புல் ஷாட் என்பது பந்து வரும் அளவையும் வரிசையையும் சரியாகக் கணித்து அதற்கேற்பக் காலை நகர்த்தி உறுதியாக நின்று பந்தை அடித்து ஆடுவது. புல் ஷாட்டைத் தூக்கி அடித்தால் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறக்க வேண்டும்.

எல்லைக் கோட்டுக்குள் பந்து தரையைத் தொடும் என்றால் அது தடுப்பாளர் இல்லாத இடத்தில் செலுத்தப்பட வேண்டும், அல்லது தடுப்பாளரை எட்டும் முன்பே தரையில் பட வேண்டும். இதில் தவறினால் புல் ஷாட் தற்கொலைக்கொப்பாகவே முடியும். சரியாக அடிக்கப்படாமல் விளிம்பில் பட்டுத் தெறிக்கும் புல் ஷாட்டின் கதியும் இதுதான். இந்திய மட்டையாளர்களின் பெரும்பாலான புல் ஷாட்கள் இப்படித்தான் முடிந்தன. கோலியும் மகேந்திர சிங் தோனியும் இந்த ஷாட்டை நன்கு கையாண்டார்கள். ரவீந்திர ஜடேஜாவும் ஓரளவு சமாளித்து ஆடினார். மற்றவர்கள் பதற்றத்துடனேயே ஆடினார்கள்.

பந்தின் அளவைச் சரியாகக் கணித்து ஆடும் திறமை கொண்ட ரோஹித் ஷர்மாவும் எகிறு பந்துகளையும் கடைசி நேரத்தில் சற்றே திசைமாறும் ஸ்விங் பந்துகளையும் சரியாக எதிர்கொள்ளவில்லை. துணைக்கண்டத்து ஆடுகளங்களில் அனாயாசமாக ஆடிய ஷிகர் தவன் இங்கே நேர்த்தியாக அடிக்கவில்லை. சரியான அளவில் வீசப்படும் பந்துகளை கிரீஸை விட்டு இறங்கி வந்து ஆடுவதன் மூலம் முழு அளவிலான பந்தாக மாற்றிவிட முடியும். வேகப் பந்து மேலெழுவதற்கு முன்பே இறங்கி வந்து அதை ஆடுவதன் மூலம் அது ஸ்விங் ஆகும் ஆபத்தையும் தவிர்க்கலாம்.

தவனின் அணுகுமுறை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. நான்கைந்து அடிகள் துள்ளி முன்னே வந்து, பந்து மேலெழுவதற்குள் அதை ட்ரைவ் அல்லது கட் அல்லது ஃப்லிக் செய்வது. இதை கௌதம் கம்பீர், தோனி ஆகியோர் சிறப்பாகச் செய்வார்கள். தவன் சிறப்பாகச் செய்யத் தவறினார். ஷர்மாவோ தன் துல்லியத்தைத் தவறவிட்டார்.

விளைவு, ஐந்து போட்டிகளில் ஒன்றில்கூட நல்ல தொடக்கம் கிட்டவில்லை. இதனால் பின்னால் வருபவர்கள் மீதான சுமை கூடியது. ரஹானே, ரெய்னா, ராயுடு ஆகியோரும் திணறலுடன்தான் பந்துகளை எதிர்கொண்டார்கள். ஒற்றை ரன் எடுத்து மறுமுனையில் இருப்பவரை ஆட விடுவதிலும் இவர்களுக்குத் தேர்ச்சி இல்லை.

பந்து வீச்சாளர்களின் நிலை மேலும் கவலைக்கிடமானது. பந்து எகிறினால் மட்டும் போதாது. ஆஃப் ஸ்டெம்புக்கு மிகவும் வெளியே பந்துகள் எகிறி வந்தால் அவற்றை அடிப்பது சுலபம். அதுபோலவே முழு அளவிலோ குறைந்த அளவிலோ லெக் திசையில் பந்துகள் வந்தால் அவற்றையும் ஒப்பீட்டளவில் எளிதாக அடிக்கலாம். யார்க்கரின் துல்லியம் சிறிது பிசகினாலும் அது ஃபுல் டாஸாக மாறிவுடும்.

இந்த எல்லா விபத்துகளும் இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பட்டது. குமார் மட்டுமே சற்றுக் கட்டுக்கோப்புடன் பந்து வீசினார். இஷாந்த் ஷர்மா மிக மோசமாக வீசினார். முகம்மது ஷமியின் வீச்சில் கட்டுக்கோப்பு இல்லை என்றாலும் இவர் சிறந்த பந்து வீச்சாளராக வருவர் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. வேகப்பந்துக்குத் தோதான களங்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஜடேஜாவும் சுழற்பந்தில் எதிரணியை ஓரளவேனும் கட்டுப்படுத்தியது ஒரு ஆறுதல்.

இந்தச் சமயத்தில் வீரேந்திர சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரின் நினைவு தவிர்க்க முடியாமல் வருகிறது. இவர்களது ஆட்டத்திறன் இன்று உச்சத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனுபவமும் இவர்களது பிரத்யேகத் திறமைகளும் இவர்களைத் தனித்துக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை வென்ற அணி இன்றைய அணி. ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு இதைச் சிறந்த அணி எனக் கொண்டாட முடியாது. இதே அணி தென்னாப்பிரிக்காவிலும் நியூஸிலாந்திலும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, சேவாக், கம்பீர், ஆகியோர் தொடக்க நிலை ஆட்டக்காரர்களாகப் பல ஆண்டுக் காலம் எல்லா விதமான களங்களிலும் சீராக ஆடிவந்தவர்கள். அவர்களைப் பதிலீடு செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அந்நிய மண்ணில் இப்படித் தடுமாறுவது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.

அடுத்தபடியாக ஐ.பி.எல்.லில் இவர்கள் பட்டையைக் கிளப்புவார்கள். உள்ளூர்ப் போட்டிகளிலும் வெளுத்து வாங்குவார்கள். ஆனால் 2015இல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கு அதெல்லாம் போதாது. எகிறு பந்துகளை ஆடுவதில் துணிச்சலும் கச்சிதமும் தேவை.

இந்திய இளம் மட்டையாளர்கள் துணிச்சலோடுதான் பந்துகளை எதிர்கொள்கிறார்கள். தொழில்நுட்பத் தேர்ச்சியிலும் தங்கள் திறமையைப் பயன்படுத்தும் விதத்திலும்தான் சறுக்குகிறார்கள்.

இதை மனதில் கொண்டு அவர்களது பயிற்சியும் முயற்சியும் அமைந்தால் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வலுவான போட்டியாளராக விளங்க முடியும். இல்லையேல் நடப்பு சாம்பியன் என்னும் பெருமை பூ வைத்த கூடையிலிருந்து வரும் வாசனை போல ஏமாற்றம் தரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x