Published : 17 Nov 2013 08:19 AM Last Updated : 17 Nov 2013 08:19 AM
உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த் மீண்டும் தோல்வி
சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி கண்டார். இதன்மூலம் தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளார் ஆனந்த்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆனந்தும், உலகின் முதல்நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். இவர்களுக்கு இடையிலான 6-வது சுற்று சனிக்கிழமை நடைபெற்றது.
5-வது சுற்றில் தோல்வி கண்ட ஆனந்த், 6-வது சுற்றில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ரய் லோபஸ் முறையிலான ஆட்டத்தை ஆடி தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். கார்ல்சனும் அதேபோன்று சிப்பாயை நகர்த்தி ஆடினார். இருவரும் அவரவர் குதிரை, பிஷப் ஆகியவற்றை முன்னே கொண்டுவந்து ஆட, 12-வது நகர்த்தலில் கார்ல்சன் தனது பிஷப்பை இழந்து ஆனந்தின் பிஷப்பை கைப்பற்றினார்.
21, 22, 23 ஆகிய நகர்த்தல்களில் இருவரும் தங்களுடைய குதிரை மற்றும் பிஷப்பினைக் கொடுத்து எதிரியின் குதிரை மற்றும் பிஷப்பினை வீழ்த்தினர். 40-வது நகர்த்தலில் இருவரும் ராணியை மாறிமாறி வெட்டினர்.
44-வது நகர்த்தலில் ஆனந்த் மேலும் ஒரு சிப்பாயைத் தியாகம் செய்து முக்கியமான ‘b’ சிப்பாயை கைப்பற்றினார். 52-வது நகர்த்தலில் 'h' வரிசையில் தனது யானையை வைத்து கார்ல்சனின் ராஜாவை ஓரம்கட்டினார் ஆனந்த். கார்ல்சனும் தனது யானையால் ஆனந்தின் ராஜாவை ஓரம் கட்டி பதிலடி கொடுத்தார். ஆனந்த், கார்ல்சனின் சிப்பாய்களைக் கைப்பற்றினாலும் கார்ல்சனின் 'f' சிப்பாய் ராணியாக மாறுவதை தடுக்க முடியவில்லை. இதனால் 67-வது நகர்த்தலில் ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
கார்ல்சன் தற்போது 4 புள்ளிகளுடனும், ஆனந்த் 2 புள்ளிகளுடனும் உள்ளனர். 6 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் மற்ற ஆட்டங்களை டிரா செய்தாலே கார்ல்சன் உலக சாம்பியன் ஆகிவிடுவார். எனவே ஆனந்த் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முடியும்.
WRITE A COMMENT