Published : 28 Jan 2014 02:03 PM
Last Updated : 28 Jan 2014 02:03 PM

தொடரை வென்றது நியூஸிலாந்து: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்து நியூஸிக்கு வெற்றி தேடித்தந்தார்.

ஹாமில்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோர் நீக்கப்பட்டு அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் பின்னி. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தவண் நீக்கப்பட்டதால், ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ரஹானேவும் 3 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாறியது.

ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த அம்பட்டி ராயுடு நிதானமாக விளையாட அணியின் ஸ்கோர் 100-ஐத் தொட்டது. ரோஹித் சர்மா 72 பந்துகளை எதிர்கொண்டு தன் 21-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். ராயுடு 37 ரன்களில் மில்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரோஹித்துடன் இணைந்தார் கேப்டன் தோனி. இந்தியாவின் ஸ்கோர் 142 ரன்களை எட்டியபோது ரோஹித் சர்மா எதிர்பாராதவிதமாக 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசினார்.

அஸ்வின் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்தார். எனினும் அதே வேகத்தில் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா வேகம் காட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. இருவருமே அரைசதம் கடந்தனர். தோனி இத்தொடரில் அடிக்கும் 3-வது அரைசதம் இதுவாகும். ஜடேஜா ஒருநாள் போட்டியில் அடித்த 8-வது அரைசதமாகும்.

ஜடேஜா 54 பந்துகளில் 62 ரன்களுடனும், தோனி 73 பந்துகளில் 79 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தோனி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களையும், ஜடேஜா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களையும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதிரடி தொடக்கம்

நியூஸிலாந்து அணிக்கு கப்டில் (35) , ரைடர் (19) ஜோடி அதிரடி தொடக்கம் அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. பின்னர் ராஸ் டெய்லருடன் இணைந்தார் கேன் வில்லியம்சன்.

இந்திய வேகப்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அஸ்வினும், ஜடேஜாவும் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்தினர். வில்லியம்சனும், டெய்லரும் சுழற்பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக ஆடினர். வில்லியம்சன் (60) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். பின்னர் டெய்லருடன் கேப்டன் மெக்கல்லம் இணைந்தார். இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட ராஸ் டெய்லர் ஒருநாள் அரங்கில் தனது 9-வது சதத்தைப் பதிவு செய்தார். கடைசிக் கட்டத்தில் மெக்கலம் அதிரடி காட்ட நியூஸிலாந்து அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெய்லர் (112), மெக்கலம் (49) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை டெய்லர் தட்டிச்சென்றார்.

இந்தியத் தரப்பில் முகமது சமி, வருண் ஆரோன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

இவ்வெற்றியின் மூலம் நியூஸிலாந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. கடந்த 5 ஆண்டுகளில் உள்ளூரில் நடைபெற்ற தொடரை நியூஸிலாந்து கைப்பற்றுவது இதுவே முதல் முறை. ஜிம்பாப்வே, கென்யா அணிகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியபோதும், பெரிய அணிகளுக்கு எதிராக தொடரைக் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x