Published : 14 Nov 2013 08:44 AM
Last Updated : 14 Nov 2013 08:44 AM
சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ரசித்து விளையாட வேண்டும் என இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முழுவதுமாக ரசித்து விளையாட வேண்டும் என விரும்பு கிறேன். அவர் சதமடிக்க வேண்டும், இரட்டைச் சதமடிக்க வேண்டும், முச்சதம் அடிக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். ஆனால் அதற்கு எவ்வித உத்தரவாதமும் கொடுக்க முடியாது. அதேநேரத்தில் அவர் சிறப்பாக பந்துவீசி சில விக்கெட்டுகளை வீழ்த்தலாம்” என்றார்.
சச்சின் ஓய்வு பற்றியே நேரடியாகவும், மறைமுகமாகவும் தோனியிடம் கேள்வியெழுப்பப்பட்டன. அப்போது பேசிய தோனி, “போட்டியின் மீது கவனம் இருக்க வேண்டும். அதை திசைதிருப்பும் வகையில் பேசவேண்டிய அவசியம் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று. ஆனால் சச்சினின் கடைசிப் போட்டியாக அமைந்துவிட்டது. முடிந்தவரை இதையும் ஒரு சாதாரண போட்டியாக பார்ப்பது அவசியம். இந்தத் தருணத்தில் ரசித்து விளையாடுவது எங்களுக்கு மிக முக்கியம்” என்றார். சச்சின் தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றியைக் கையாண்ட விதம் பற்றிப் பேசிய தோனி, “வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலானோர் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை சிறப்பாகக் கையாண்டு சாதித்தபோதிலும், களத்துக்கு வெளியில் ஏற்பட்ட பிரச்சினை களை சிறப்பாகக் கையாள முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஆனால் சச்சின் களத்திற்கு வெளியில் ஏற்பட்ட நெருக்கடியையும் சிறப்பாக சமாளித்தி ருக்கிறார். அதுதான் அவருடைய சிறப்பு.
சச்சின் மற்றும் ராகுல் திராவிட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் இளம் வீரர்களை திறமையின் அடிப்படையில் அணியில் சேர்த்துதான் ஆக வேண்டும். அவர்களுக்கென்று தனித்திறமை இருக்கும். உதாரணமாக விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் அவராகத்தான் விளையாட வேண்டும்.
சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் இந்தியாவுக்கு ஒரு வகையான வெற்றி யைக் கொண்டு வந்தார்கள் என்றால், புதிய வீரர்கள் மற்றொரு வகை யான வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத்தருவார்கள். சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் பெற்றுத்தந்த வெற்றியைப் போன்று இளம் வீரர்களும் பெற்றுத்தர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது.
நான் சச்சினுடன் 8 முதல் 10 ஆண்டுகள் வரை விளையாடியிருக்கிறேன். நெருக்கடி யான நேரங்களில் எப்படி விளையாட வேண்டும் என அவர் எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். அவருடன் இணைந்து உலகக் கோப்பையை வென்றது உணர்ச்சிபூர்வமான தருணம் ஆகும். எனவே அவர் ஓய்வு பெறும் இந்தத் தருணத்தில் வீரர்கள் தங்களின் உணர்ச்சிகளை கட்டுபடுத்துவது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அங்கு சச்சினுடன் இணைந்து சில தீபாவளிகளைக் கொண்டாடியிருக்கிறேன். நாங்கள் ஒன்றாக இணைந்து பட்டாசு வெடித்திருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT