Published : 09 Feb 2014 02:36 PM
Last Updated : 09 Feb 2014 02:36 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முதல் சேர்மன் ஆகிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான என்.சீனிவாசன். அவர் ஜூலையில் பதவியேற்கவுள்ளார். இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசியின் செயற்குழு கூட்டத்தில் ஐசிசியின் நிர்வாக நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர் பான தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளும் வாக்களிக்க மறுத்தபோதிலும் எஞ்சிய 8 நாடுகளின் ஆதரவுடன் ஐசிசியின் நிர்வாக நடை முறைகள் மறுசீரமைப்பு செய்யப் பட்டுள்ளன.
செயற்குழு, நிதி மற்றும் வர்த்தக ரீதியிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் இருப்பார்கள்.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த வாலி எட்வர்ட்ஸ் செயற்குழுவின் தலைவராகவும், இங்கிலாந்து வாரியத்தைச் சேர்ந்த ஜில்ஸ் கிளார்க் நிதி மற்றும் வர்த்தக கமிட்டியின் தலைவராகவும் இருப்பார்கள். இவர்களின் பதவிக்காலம் 2016 வரை ஆகும். அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த இரு கமிட்டிகளிலும் 3 பேர் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வாரியங்களைச் சேர்ந்தவர்களாகவும், மற்ற இருவர் எஞ்சிய கிரிக்கெட் வாரியங்களைச் சேர்ந்தவர் களாகவும் இருப்பார்கள் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் நிதி புதிதாக உருவாக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தவிர மற்ற அனைத்து வாரியங்களும் பயன்பெறும். 2017 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. ஐசிசியின் மறுகட்டமைப்பை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வரவேற்றிருக்கும் அதேவேளையில் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT