Published : 15 Nov 2013 10:16 AM
Last Updated : 15 Nov 2013 10:16 AM
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்டில் அரைசதம் அடித்து விளையாடி வரும் நிலையில், ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் மகிழ்ந்தனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் முதல் நாளில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 73 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38, புஜாரா 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கு இடையே போட்டியின் இரண்டாவது நாளில் தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார் சச்சின்.
சச்சின் பேட்டிங்கின் ஒவ்வொரு அசைவுக்கும் ரசிகர்கள் ஆனந்தக் குரல் எழுப்பினர். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியபோது வான்கடேவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.
பின்னர், சச்சின் டெண்டுல்கர்கள் 91 பந்துகளில் அரைசதத்தை (52*) எட்டியபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
அப்போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. சச்சினுடன் எதிர்முனையில் விளையாடி வரும் புஜாரா 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முன்னதாக, 200-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சச்சினுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் நேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இது அவருடைய கடைசி போட்டி என்பதால், அவரின் ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் 32 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட வான்கடே மைதானம் நிரம்பி வழிந்தது.
சச்சின் பீல்டிங் செய்வதற்கு களமிறங்கியபோது மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு பதாகைகளைக் காட்டி வரவேற்றனர். பதிலுக்கு சச்சினும் அவர்களைப் பார்த்து கையை அசைத்தார். அப்போது மைதானமே அதிர்ந்தது.
இந்தப் போட்டியைக் காண சச்சினின் தாய், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய இளம் வயது பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் உள்ளிட்டோர் மைதானத்திற்கு வந்திருந்தனர். போட்டியில் டாஸ் போடுவதற்கு சச்சின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது சச்சினுக்கு பரிசளிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸ்சில் 55.2 ஓவர்களில் 182 ரன்களுக்கு சுருண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT