Published : 03 Oct 2013 04:16 PM
Last Updated : 03 Oct 2013 04:16 PM
ஒடாகோ அணியை வீழ்த்தியதன் மூலம் ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 12-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான், சொந்த மண்ணில் எதிரணிகளால் அசைக்க முடியாத அணியாகத் திகழ்கிறது.
சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகோ அணியைத் தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் தனது “ஹோம் கிரவுண்ட்”டில் (ஜெய்ப்பூர்) தொடர்ச்சியாக 12-வது வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான், அங்கேயே அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஒடாகோ 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ராகுல் சுக்லா அபாரம்
முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட், ஒடாகோ அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். நீல் புரூம், ரூதர்போர்டு ஆகியோர் அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கினர்.
வேகப்பந்து வீச்சாளர் விக்ரமஜித் மாலிக்கிற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்த ராகுல் சுக்லா, தான் வீசிய முதல் ஓவரிலேயே (ஆட்டத்தின் 4-வது ஓவர்) ரூதர்போர்ட் (5), பிரென்டன் மெக்கல்லம் (0), டி பூர்டர் (0) ஆகிய 3 பேரையும் வெளியேற்றி, அந்த ஓவரையும் மெய்டனாக்கினார்.
வாட்சன் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரில் நீல் புரூம் (11 ரன்கள்) ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 21 ரன்களை எடுத்து தடுமாறியது ஒடாகோ.
எனினும் 5-வது விக்கெட்டுக்கு டென் தஸ்சாத்தே-நீஷாம் ஜோடி 53 ரன்கள் சேர்க்க, அந்த அணி ஓரளவு சரிவிலிருந்து மீண்டது. நீஷாம் 32, தஸ்சாத்தே 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்தவர்களில் இயான் பட்லர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார். நாதன் மெக்கல்லம் 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது ஒடாகோ.
ராஜஸ்தான் தரப்பில் சுக்லா 3 விக்கெட்டுகளையும், கெவோன் கூப்பர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ரஹானே, ஹோட்ஜ் விளாசல்
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் அஜிங்க்ய ரஹானே-ராகுல் திராவிட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தது. ஒருபுறம் ரஹானே அதிரடியாக விளையாட, மறுமுனையில் நிதானம் காட்டிய திராவிட், 17 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த சஞ்ஜூ சாம்சன் 5 ரன்களிலும், வாட்சன் 2, ஸ்டூவர்ட் பின்னி 1 ரன்னிலும் நடையைக் கட்ட, ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து ரஹானேவுடன் இணைந்தார் பிராட் ஹோட்ஜ். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானே 44 பந்துகளில் அரைசதம் கண்டார்.
ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய பிராட் ஹோட்ஜ், சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்ட, சரிவிலிருந்து மீண்ட ராஜஸ்தான், 16-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. அந்த அணி 116 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த ஜேம்ஸ் பாக்னர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஹோட்ஜுடன் இணைந்தார் கெவோன் கூப்பர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹோட்ஜ், பட்லர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட, ராஜஸ்தான் இலக்கை எட்டியது. ஹோட்ஜும் அரைசதம் கண்டார். ஹோட்ஜ் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52, கூப்பர் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஒடாகோ தரப்பில் நீஷாம் 3 விக்கெட்டுகளையும், வாக்னெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் வீரர் ராகுல் சுக்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஹோட்ஜுக்கு திராவிட் புகழாரம்
பிராட் ஹோட்ஜ், நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடி போட்டியை வெற்றியில் முடிக்கக்கூடியவர். எல்லோராலும் அவரைப் போல் விளையாட முடியாது என்றார் ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'கடைசிக் கட்டத்தில் நெருக்கடியான சூழலில் பிராட் ஹோட்ஜ், அதிரடியாக விளையாடியதைப் போன்று எல்லோரும் விளையாட முடியாது. அவரைப் போன்று அதிரடியாக விளையாடக்கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் நிறைய பேரை நான் பார்த்ததில்லை' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT