Published : 14 Oct 2013 03:16 PM
Last Updated : 14 Oct 2013 03:16 PM

முதல் ஒருநாள்: இந்தியாவை 72 ரன்களில் வீழ்த்தியது ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சிறப்பான வெற்றியைப் பெற்றது.

புணே நகரில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க விளையாட்டரங்களில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக இந்த ஆட்டம் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 49.4 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களால் சிறப்பாக விளையாடி இலக்கை எட்ட முடியல்லை.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இரு அணிகளும் மொத்தம் 7 ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. அடுத்து ஆட்டம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

கேப்டன் பெய்லி 82 பந்தில் 10 பவுண்டரியுடன் 85 ரன்னும், தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 79 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்னும், மற்றொரு தொடக்க வீரர் ஹியூக்ஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின், யுவராஜ்சிங் தலா 2 விக்கெட்டும், வினய்குமார், இஷாந்த்சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

305 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி பின்னர் விளையாடியது. தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஷிகார்தவான் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

2–வது விக்கெட்டான ரோகித்சர்மா– வீராட் கோலி ஜோடி நிலைத்து ஆடியது. ரோகித்சர்மா 42 ரன்னும், அடுத்து வந்த ரெய்னா 39 ரன்னிலும், யுவராஜ்சிங் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வீராட் கோலியும் 61 ரன்னில் 5–வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 166 ஆக இருந்தது.

அதன்பிறகு இந்திய விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. ஜடேஜா 11 ரன்னிலும், கேப்டன் டோனி 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.

49.4 ஓவர்களில் இந்திய அணி 232 ரன்னில் சுருண்டது. இதனால் 72 ரன்னில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.

பவ்ல்னெர் 3 விக்கெட்டும், மெக்காய், வாட்சன் தலா 2 விக்கெட்டும், ஜான்சன், ஹோக்ஸ், பிஞ்ச் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பெய்லி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 7 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் வருகிற 16–ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x