Published : 19 Mar 2014 11:28 AM
Last Updated : 19 Mar 2014 11:28 AM
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று என்றழைக்கப்படும் முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது ஹாங்காங்.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹாங்காங் அணியில் தொடக்க ஆட்டக்காரர் இர்பான் அஹமது ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, பின்னர் வந்த அட்கின்ஸன் 20 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வகாஸ் பர்கட் 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்தவர்களில் எம்.எஸ்.சாப்மேன் மட்டுமே 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது ஹாங்காங்.
154 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரக்காய் 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷாசத் அதிரடியாக ரன் சேர்த்தார். 41 பந்துகளில் அரைசதம் கண்ட அவர், சபியுல்லாவுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தார். 53 பந்துகளைச் சந்தித்த ஷாசத் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் முகமது நபி களம்புகுந்தார்.
அயாஸ்கான் வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய சபியுல்லா, 24 பந்துகளில் அரைசதமடிக்க, ஆப்கானிஸ்தான் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. முகமது ஷாசத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ஆப்கானிஸ்தான்.
மே.இ.தீவுகள் வெற்றி
வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயோன் மோர்கன் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டுவைன் ஸ்மித்-கிறிஸ் கெயில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 30 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார் கெயில். அவர் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்க்க, மே.இ.தீவுகள் 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT