Published : 28 Mar 2014 09:59 AM
Last Updated : 28 Mar 2014 09:59 AM

அரையிறுதி முனைப்பில் இந்தியா வங்கதேசத்துடன் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை சந்திக்கிறது.

முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்த இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் கனவில் களம் காண்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் படுதோல்வி கண்ட வங்கதேச அணி, உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே வங்கதேசத்தைவிட மிக மிக வலுவானதாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரெய்னா ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.

மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது கவலையளிக்கிறது. எனினும் அவருக்கு இந்தப் போட்டியிலும் கேப்டன் தோனி வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 போட்டியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தோனிக்கு பேட்டிங்கில் இதுவரை போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவரின் அதிரடியைக் காணலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக புவனேஸ்வர் குமார் 3 ஓவர்களை வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா தொடர்ந்து கலக்கி வருகிறார். கடந்த இரு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்ற அமித் மிஸ்ரா, வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் இந்தியாவுக்கு பலம் சேர்க்கின்றனர்.

வங்கதேச அணி அரையிறுதி நம்பிக்கையை தக்கவைக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 98 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச அணி, கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை சந்திக்கிறது. அந்த அணியின் பேட்டிங், பௌலிங் இரண்டுமே மிக பலவீனமாக உள்ளது.

கேப்டன் முஷ்பிகர் ரஹிம், மூத்த ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசன் ஆகியோரைத் தவிர அந்த அணியில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் விளையாடவில்லை. வங்கதேச அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசிர் ஹுசைன் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு கேட்சுகளை கோட்டைவிட்ட மகமதுல்லா, இந்தப் போட்டியில் நீக்கப்படமாட்டார் என தெரிகிறது. அவர் நீக்கப்படாத பட்சத்தில் சபிர் ரஹ்மான் ஆடும் லெவனில் இடம்பெறும் வாய்ப்பை இழப்பார்.

மோர்ட்டஸா இடம்பெறுவாரா என்பது குறித்து போட்டிக்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோஹித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, அஜிங்க்ய ரஹானே, வருண் ஆரோன்.

வங்கதேசம்: முஷ்பிகர் ரஹிம் (கேப்டன்), தமிம் இக்பால், அனாமுல் ஹக், மோமினுல் ஹக், ஷகிப் அல்ஹசன், சபிர் ரஹ்மான், மகமதுல்லா ரியாத், ஜியாவூர் ரஹ்மான், சோஹாக் காஜி, அல்-அமின் ஹுசைன், மோர்ட்டஸா, அப்துர் ரசாக், நாசிர் ஹுசைன், சம்சுர் ரஹ்மான், ஃபர்ஹட் ரெஸா.

போட்டி நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x