Published : 23 Jan 2014 10:27 AM
Last Updated : 23 Jan 2014 10:27 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 6-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மோதுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் நடால் 3-6, 7-6 (3), 7-6 (7), 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 22-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்தார்.
நடாலுக்கு காயம்
3 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இடது கை ஆட்டக்காரரான நடாலின் இடது கையில் கொப்பு ளங்கள் ஏற்பட்டபோதும் அவர் விடாப்பிடியாகப் போராடி வெற்றி கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் நடாலின் முதல் சர்வீஸை முறியடித்த கிரிகோர், அதன்பிறகு சாமர்த்தியமாக ஆடி தனது சர்வீஸை தக்கவைத்தார். இதனால் அந்த செட் 6-3 என்ற கணக்கில் கிரிகோர் வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 2-வது கேமில் கிரிகோரின் சர்வீஸை முறியடித்த நடால், 3-வது கேமில் கிரிகோரிடம் தனது சர்வீஸை இழந்தார். நடால் 3 டபுள் பால்ட் தவறுகளை செய்ததால் அவரால் தனது சர்வீஸை மீட்க முடியாமல் போனது. இதனால் டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை ஒருவழியாக 7-6 (3) என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார்.
இதன்பிறகு நடைபெற்ற 3-வது செட்டும் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் கடுமையாகப் போராடிய நடால் அந்த செட்டை 7-6 (7) என்ற கணக்கில் கைப்பற்ற, ஆட்டம் 4-வது செட்டுக்கு சென்றது. அதில் 2-வது கேமிலேயே கிரிகோரின் சர்வீஸை முறியடித்தார் நடால். இந்த கேம் 6 முறை டியூஸ் வரை சென்றபோதும் நடால் கடுமையாகப் போராடி கிரிகோரின் சர்வீஸை பிரேக் செய்து, அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
வெற்றி குறித்துப் பேசிய நடால், “3-வது செட்டில் செட் பாயிண்டை மீட்ட நான் அதிர்ஷ்டசாலி. கிரிகோர் சில எளிதான போர்ஃஹேண்ட் ஷாட்களை தவறவிட்டார். இந்த நாள் என்னுடைய நாள். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். 2009 ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், அதில் தொடர்ந்து 4-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் இது அவருடைய 22-வது கிராண்ட்ஸ்லாம் அரை யிறுதியாகும். இதன்மூலம் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார் நடால்.
ரோஜர் ஃபெடரர் வெற்றி
மற்றொரு ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 6-ம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் உலகின் 4-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “ஆன்டி முர்ரே சிறப்பாக விளையாடுவார் என நினைத்தேன். துரதிருஷ்டவசமாக 3-வது செட்டை வெல்ல முடியாமல் போனது. அந்த செட்டில் ஃபோர்ஹேண்ட் மற்றும் சர்வீஸ் என இரண்டையும் சிறப்பாக ஆடவில்லை. எனினும் இறுதியில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி யளிக்கிறது” என்றார். தொடர்ந்து 11-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி யிருக்கிறார் ஃபெடரர்.
அசெரன்கா அவுட்
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 1-6, 7-5, 0-6 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
மற்றொரு காலிறுதியில் 20ம் நிலை வீராங்கனையான ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார். அரையிறுதியில் அக்னீஸ்காவும், டொமினிகாவும் மோதுகின்றனர்.
பயஸ் ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தோல்வி கண்டது. போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் 2-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா-நிகோலஸ் மஹத் ஜோடியிடம் தோல்வி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT