Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM
மூளைக்காரர்களின் விளை யாட்டான செஸ்ஸில் ரஷியாவின் ஆதிக்கம்போய் இன்று தமிழகத்தின் ஆதிக்கம் விண்ணளவுக்கு வியாபித்திருக்கிறது. இந்திய செஸ்ஸின் சொர்க்க பூமியாக மட்டுமின்றி, இந்தியாவின் ரஷியா வாகவும் திகழ்கிறது தமிழகம்.
ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய செஸ்ஸில், இன்று தமிழர்களை கோலோச்ச வைத்த பெருமை பழமைவாய்ந்த தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தையே சேரும். செஸ்ஸில் தமிழர்கள் சாதிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை தமிழர்கள் பார்த்து ரசிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் ரூ.29 கோடி நிதியுதவியுடன் தமிழகத்தின் தலை நகரான சென்னையில் வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை உலக செஸ் போட்டி நடைபெறவுள்ளது.
நிசப்தமான செஸ் உலகில் சப்தமின்றி சாதித்துக் கொண்டி ருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் 1947-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி மெட்ராஸ் செஸ் கிளப் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னபுரி ஆந்திர மகிளா சபாவிலிருந்து இந்த செஸ் கிளப் செயல்படத் தொடங்கியது. டி.ஏ.கிருஷ்ணமாச்சாரி, சார்லஸ் தியோபால்ட், எஸ்.கே.சுப்பிரமணி யம், ஏ.வி.ராமுலு, பி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து இந்த செஸ் கிளப்பை தொடங்கினர். இந்த கிளப்பின் முதல் செயலராக ஏ.வி.ராமுலு தேர்வு செய்யப்பட்டார். அவர் 1951 வரை இதன் செயலராக இருந்தார்.
1947 மே 20-ம் தேதி மெட்ராஸ் செஸ் கிளப், மெட்ராஸ் செஸ் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த சங்கம், 1951 ஜூன் 24-ம் தேதி மெட்ராஸ் மாநில செஸ் சங்கம் என பெயர் மாற்றப்பட்டது. 1969-ல் மெட்ராஸ், தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டபோது, மெட்ராஸ் மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு மாநில செஸ் சங்கமானது.
இந்தியாவின் முதல் இண்டர் நேஷனல் மாஸ்டர் மானுவேல் ஆரோன், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் முதல் மகளிர் கிராண்ட் மாஸ்டர் விஜயலட்சுமி, இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் ஆர்பிட்டர் (நடுவர்) வி.காமேஷ்வரன், வயது பிரிவு உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் முதல் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆர்த்தி ராமசாமி என நூற்றுக்கும் மேற்பட்ட சாம்பியன்கள் தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தால் உருவாக்கப்பட்டவர்கள்.
இந்தியாவின் 34 கிராண்ட் மாஸ்டர்களில் 13 பேரும், இந்தியாவின் 76 இண்டர்நேஷனல் மாஸ்டர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர தமிழகத்தில் 3 மகளிர் கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர். இந்தியாவில் உள்ள ஃபிடே ரேட்டிங் வீரர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். வயது பிரிவு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழக வீரர்கள் ஏராளமானோர் வாகை சூடியுள்ளனர். தகுதியான பயிற்சியாளர்களுக்கும், அகா தெமிகளுக்கும் தமிழகத்தில் பஞ்ச மில்லை எனலாம். தமிழகத்தில் 27 இண்டர்நேஷனல் ஆர்பிட்டர்கள், 30 ஃபிடே ஆர்பிட்டர்கள் உள்ளனர்.
இரு பாலரும் ஆதிக்கம்
தமிழகத்தில் பெரும்பாலான விளையாட்டுகளில் மற்ற மாவட்டங்களைவிட சென்னைதான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் செஸ் விளையாட்டில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சென்னைக்கு நிகராக முன்னணி வீரர்கள் உள்ளனர். உதாரணமாக கிராண்ட்மாஸ்டர் தீபன் சக்ரவர்த்தி மதுரையைச் சேர்ந்தவர். கிராண்ட் மாஸ்டர் அருண் பிரசாத் சேலத்தில் செஸ் கற்றவர். வளர்ந்து வரும் இளம் செஸ் வீரர்களான அரவிந்த் சிதம்பரம், ராம் அரவிந்த் ஆகியோர் மதுரை மற்றும் திருச்சி மண்ணின் மைந்தர்கள்.
இந்தியாவின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சேலம், நெய்வேலி, தூத்துக்குடி போன்ற நகரங்கள் செஸ் போட்டிக்கு பெயர் பெற்றவையாகும். தமிழகத்தில் ஆடவர், மகளிர் என இரு பாலரும் சரிக்கு சமமாக விளையாடக்கூடிய விளையாட்டாக செஸ் உருவெடுத்திருக்கிறது. ஆடவருக்கு நிகராக மகளிரும் இப்போது சாதித்து வருகின்றனர்.
முன்மாதிரியான நிர்வாகம்
தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாக அமைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. பத்திரிகை ஆசிரியர்களில் தொடங்கி, நூற்பாலை, சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இங்கு தலைவர்களாக இருந்துள் ளனர். தற்போதைய தலைவர் வெங்கட்ராம ராஜா, ராம்கோ குழுமத்தைச் சேர்ந்தவர். இதேபோல் செஸ் வீரர்கள், ஆர்பிட்டர்கள் ஆகியோரும் இங்கு நிர்வாகிகளாக பதவி வகித்தி ருக்கின்றனர். இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரான மானுவேல் ஆரோன், முதல் இண்டர்நேஷனல் ஆர்பிட்டரான காமேஷ்வரன் ஆகியோரும் இங்கு செயலாளர்களாக பணி யாற்றியுள்ளனர். தற்போதைய செயலாளர் ஹரிஹரன் முன்னாள் செஸ் வீரர் ஆவார்.
அகில இந்திய செஸ் சம்மேள னத்தின் தற்போதைய தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், செயலாளர் ஹரிஹரன், ஃபிடே (சர்வதேச செஸ் சம்மேளனம்) துணைத் தலைவராக இருக்கும் டி.வி. சுந்தர் ஆகியோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஃபிடே துணைத் தலைவராக இருந்த முதல் ஆசியரான எஸ்.கே.நரசிம்மனும் தமிழர்.
மைல்கல்
சிறப்பான வீரர்களை உருவாக்கிய தமிழ்நாடு செஸ் சங்கம், இங்கு போட்டிகளை நடத்துவதிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 1991-ல் சென்னையில் ஆசிய பிராந்திய செஸ் போட்டி, 1978-ல் திருச்சியில் கிராண்ட்மாஸ்டர் போட்டி, 1979-ல் சிவகாசியில் ஆசிய ஜூனியர் போட்டி, 1987-ல் சென்னையில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி களை இந்தியாவில் முதல்முறை யாக நடத்தி சாதனை படைத்தது தமிழ்நாடு மாநில செஸ் சங்கம். இதேபோல் 1999-ல் இந்தியாவின் முதல் ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டி தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதுபோன்ற போட்டிகளை நடத்தியது தமிழக செஸ் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய செஸ் வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பழம்பெருமை மிக்க தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் தனது 67 ஆண்டுகால செஸ் பயணத்தில் மானுவேல் ஆரோன், ஆனந்த் போன்ற ஜாம்பாவான்களை உருவாக்கி உலக செஸ்யை திரும்பி பார்க்க வைத்து வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT