Published : 28 Oct 2013 10:33 AM
Last Updated : 28 Oct 2013 10:33 AM
விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான மக்களின் மனநிலை மாற வேண்டும் என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா கூறியுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு வீராங்க னைகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சானியா மிர்சா மேலும் கூறியது: இந்தியாவில் ஒரு பெண் விளையாட்டுத் துறையில் அனைவரும் அறிந்தவர், பிரபலமானவர் என்ற நிலையில் இருப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.
என்ன உடை நீங்கள் அணிகிறீர்கள், என்ன மாதிரியாக நீங்கள் பேசுகிறீர்கள், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் என்னிடம் ஊடகத்துறையினர் அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால் எனது கணவரிடம் (பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்) உங்களுக்கு குழந்தை எப்போது என்று யாரும் கேட்பது இல்லை.
ஒரு பெண் தன்விருப்பப்படி ஏதாவது காரியத்தை செய்ய நினைத்தால், அவளைப் பெரிதாக குறை கூறுகின்றனர். சமூகத்தின் எதிராளியாக சித்தரிக்கின்றனர் என்றார். இளம் வீராங்கனைகளுக்கு அறிவுரை கூறி பேசிய சானியா, இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எனவே இளம் வீராங்கனைகள் சிறிய விஷயங்களை பின்தள்ளிவிட்டு தங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
என்னை கர்வம்மிக்க பெண் என்று குற்றம்சாட்டினர். எனினும் நான் யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே இந்த நிலையை எட்ட முடிந்தது. ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில் போராடினால்தான் நாம் வெல்ல முடியும். எனவே பிறர் கூறும் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ள வேண்டாம்.
அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பெண்கள் தங்கள் விரும்பிய துறையில் சாதனை படைக்க நிச்சயமாக பெற்றோரின் ஆதரவு தேவை. விளையாட்டில் கூட ஆண்கள் விளையாட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT