Published : 04 Oct 2013 01:02 PM
Last Updated : 04 Oct 2013 01:02 PM
மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் இது தொடர்பாக மேலும் கூறியது: 200-வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமென்று பிசிசிஐ வலியுறுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது, அபத்தமானது. இப்போது நான் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது டெண்டுல்கரின் தனிப்பட்ட உரிமை. அவர்தான் அது தொடர்பாக முடிவு செய்வார்.
சச்சின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஓய்வு பெற வேண்டுமென்று பிசிசிஐ ஒருபோதும் கூறாது. எனவே ஊடகத்தில் இருக்கும் நண்பர்கள், எவ்வித தவறான செய்திகளையும் வெளியிடக் கூடாது.
சச்சின் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில், அணித் தேர்வுக்குழுவினர் அவரை நிச்சயமாக அணியில் சேர்த்துக் கொள்வார்கள். சச்சின் எந்த முடிவை எடுத்தாலும், கிரிக்கெட் வாரியம் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் என்றார்.
ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் இப்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்ததாக மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அப்போது இந்திய அணிக்கு எதிராக இரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை படைப்பார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சச்சின்தான். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் உள்ளனர். இருவரும் தலா 168 டெஸ்ட் போட்டிகளில் விளையா டியுள்ளனர். இந்தியாவின் ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT