Published : 11 Dec 2013 12:23 PM
Last Updated : 11 Dec 2013 12:23 PM

இந்தியா மீதான தடை நீக்கம்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு

ஐ.ஓ.சி (சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) விதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதால், குளிர்கால ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதன் மூலம் 40 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், தடை செய்யப்பட்ட நாடு என்ற அவப் பெயரிலிருந்து இந்தியா காப்பாற்றப் பட்டுள்ளது.

பங்குபெறும் வீரர்கள் இந்தியாவின் சார்பாக விளையாடுவார்களா அல்லது ஒலிம்பிக் கொடியின் கீழ், அதன் சார்பாக விளையாடுவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை. குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஒலிம்பிக் சங்கத்தில் இருக்கக் கூடாது என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதி. ஆனால் இதை இந்தியா பின்பற்றாமல் இருந்ததால் அதை ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்யப்போவதாக ஐஓசி ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்நிலையில், வேறு வழியில்லாமல் விதிகளுக்கு இந்தியா பணிந்தது. ஐ.ஓ.சி தலைவர் பேக் இது குறித்து பேசுகையில், "சரியான பாதையில் செல்வதற்கான பெரிய முன்னேற்றம் இது. எங்களது புதிய விதிகளை இந்தியா அமல்படுத்தி, ஒலிம்பிக் சங்கத்திற்கான நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

2010 காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை அளிக்கப்பட்டு, 10 மாதம் சிறையில் இருந்த லலித் பானோட், டிசம்பர் மாதம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து, இந்தியா ஐ.ஓ.சியால் இடைநீக்கம் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம், சோச்சி ஒலிம்பிக் ஆரம்பித்த இரண்டு நாட்கள் கழித்தே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடைபெறும் தேர்தல், விதிகள் படி நடக்காவிட்டால், இந்தியா கண்டிப்பாக தடை செய்யப்படும் என்றும், இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ், தனி வீரர்களாக விளையாடுவார்கள் என பேக் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் எந்த வகையிலும் இதனால் பாதிக்கபட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

ஒரு வேளை, ஒலிம்பிக்கின் துவக்கத்திற்கு முன்பே தேர்தல் ஒழுங்காக நடந்தால், இந்த இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, இந்தியாவின் சார்பாகவே வீரர்கள் விளையாடலாம் என்று பேக் கூறியுள்ளார்.

இந்த குளிர்கால ஒலிம்பிக்கிற்கு, சிவ கேசவன் தலைமையில், மூன்று பேர் கொண்ட அணியை இந்தியா அனுப்புகிறது. சிவ கேசவன் தனது ஐந்தாவது குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளார். ஜப்பானில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாதனை படைத்த கேசவன், இந்த முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x