Published : 26 Dec 2013 09:50 AM
Last Updated : 26 Dec 2013 09:50 AM
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையி லான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2-வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் காண்கின்றன. கடந்த போட்டியை வெற்றியில் முடிக்க வாய்ப்பிருந்தும் டிரா செய்ததால் உள்ளூர் ரசிகர்களின் கோபத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான தென் ஆப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் வெல்ல போராடும். இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி அந்தக் குறையைப் போக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப் படுகிறது. தொடக்க வீரர்களான முரளி விஜய்-ஷிகர் தவண் ஜோடி கடந்த போட்டியில் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. அவர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் நெருக்கடியின்றி விளையாட முடியும்.
பலம் சேர்க்கும் புஜாரா, கோலி
முதல் டெஸ்டில் முரளி விஜய், ஷிகர் தவண் ஆகியோர் விரைவாக வெளியேறியபோதும் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி சதமடித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். இந்தப் போட்டியிலும் அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு வலு சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் வீரர் அஜிங்க்ய ரஹானே கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் சேர்த்ததோடு, இந்தியாவின் சரிவையும் தடுத்து நிறுத்தினார். இந்திய ஆடுகளங்களில் வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மாவின் அதிரடி, தென் ஆப்பிரிக்காவில் எடுபடவில்லை. அவரும், கேப்டன் தோனியும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க முடியும்.
பந்துவீச்சைப் பொறுத்த வரையில் ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, முகமது சமி, அஸ்வின் ஆகியோருடைய கூட்டணியில் மாற்றமிருக்காது என தெரி கிறது. டர்பன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு மட்டு மின்றி சுழற்பந்து வீச்சுக்கும் ஓரளவு சாதகமாக இருக் கும் என தெரிகிறது. எனினும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பகுதிநேர பந்துவீச்சாளர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பில்லை.
விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்குமா?
முதல் டெஸ்டில் சரிவிலிருந்து மீண்டு 458 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நெருங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ரன்களில் வெற்றியை கோட்டைவிட்டது. இதனால் டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங் வெற்றியைப் பெறும் வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்க அணி அந்நாட்டு ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானது. எனவே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் போட்டியில் விளையாட தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கிரீம் ஸ்மித், ஆல்விரோ பீட்டர்சன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தும், 2-வது இன்னிங்ஸில் பீட்டர்சனும் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
கடந்த போட்டியில் அரை சதத்தை எட்டாத ஆம்லா, தனது சொந்த ஊரில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரன் குவிக்க போராடுவார். இதுதவிர டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், காலிஸ், ஜே.பி.டுமினி ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை வெற்றியின் அருகில் அழைத்துச் சென்ற டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆல்ரவுண்டர் பிலாண்டர்
வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்ட ரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 59 ரன்களை சேர்த்த பிலாண்டர் தென் ஆப்பிரிக்கா சரிவிலிருந்து மீள்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட பிலாண்டர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மோர்கல் இடம்பெறுவாரா?
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஸ்டெயின், பிலாண்டர், ஜாக்ஸ் காலிஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு பலம் சேர்க்கின்றனர். கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மோர்ன் மோர்கல் இந்தப் போட்டி யில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவர் உடற்தகுதி பெறும்பட்சத்தில் கடந்த போட்டியில் ஜொலிக்காத சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு ராபின் பீட்டர்சன் சேர்க்கப்படலாம். ஒருவேளை 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது என் தென் ஆப்பிரிக்கா முடிவெடுத்தால் கைல் அப்பாட் சேர்க்கப்படலாம். பீட்டர்சன், தாஹிர் ஆகிய இருவருக்குமே ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.
இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், விருத்திமான் சாஹா.
தென் ஆப்பிரிக்கா: கிரீம் ஸ்மித் (கேப்டன்), ஏ.பி.டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஹசிம் ஆம்லா, ஜே.பி.டுமினி, ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், டியான் எல்கர், இம்ரான் தாஹிர், ஜாக்ஸ் காலிஸ், ரோரி கிளெய்ன்வெல்ட், மோர்ன் மோர்கல், ஆல்விரோ பீட்டர்சன், ராபின் பீட்டர்சன், வெர்னான் பிலாண்டர், டேல் ஸ்டெயின், தமி சோலேகைல், கைல் அப்போட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT