Published : 27 Jan 2014 11:27 AM
Last Updated : 27 Jan 2014 11:27 AM

சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்று: ரீகன் கோலில் தமிழகம் வெற்றி: 1-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் தமிழகம் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தைத் தோற்கடித்தது.

இந்த ஆண்டுக்கான சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் தென் மண்டல தகுதிச்சுற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தமிழகமும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன் னேறிய அணியான கேரளமும் மோதின.

சுதாகர் தலைமையில் களமிறங் கிய தமிழக அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது. 3-5-2 என்ற “பார்மட்டில்” விளையாடிய தமிழக அணியில் ரீகன், சாந்தகுமார், சார்லஸ் ஆனந்தராஜ் ஆகியோர் அற்புதமாக பந்தைக் கடத்தி கேரள வீரர்களைத் திணறடித்தனர். ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் “மிட் பீல்டில்” சார்லஸ் தன்னிடம் வந்த பந்தை இடது எல்லையில் நின்ற சாந்தகுமாருக்கு அடித்தார். அதை சரியாகப் பயன்படுத்திய சாந்தகுமார், கோல் கம்பத்தின் அருகில் நின்ற ரீகனுக்கு கடத்த, அதை கோலாக மாற்றினார் ரீகன். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழகம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கேரள அணி கடுமையாகப் போராடியபோதும், தமிழக வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2-வது பாதி ஆட்டத் தில் தமிழக அணிக்கு சுமார் 4 கோல்கள் கை நழுவிப்போனது. சார்லஸ், ரீகன் ஆகியோர் தலா ஒரு முறை கோலடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவிட்டனர்.

மற்றொரு வாய்ப்பில் சார்ஸ் “பாஸ்” செய்த பந்தை கோல் கம்பத்தின் முன்னால் நின்ற கேப்டன் சுதாகருக்கு அடித்தார் ரீகன். ஆனால் சுதாகர் அடித்த பந்து துரதிருஷ்டவசமாக கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது. கடைசி வரை போராடியும் இரு அணிகளுக்குமே இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் கிடைக் காமல் போகவே, தமிழகம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

தமிழக கோல் கீப்பர் அருண் பிரதீப், கேரளத்தின் சில நல்ல கோல் வாய்ப்புகளை அற்புதமாக தகர்த்தார். 40 “யார்டு” தூரத்தில் இருந்து கேரளத்தின் சுர்ஜித் அடித்த அதிவேக ஷாட்டை துல்லியமாக முறியடித்தார் அருண் பிரதீப். அதேநேரத்தில் கேரள கோல் கீப்பர், ஜீயன் கிறிஸ்டியான் கடுமையாகப் போராடி, தமிழகத்தின் பல கோல் வாய்ப்புகளை தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரம் வெற்றி

முன்னதாக நடைபெற்ற ஆந்திரம்-அந்தமான் மற்றும் நிக் கோபார் தீவுகளுக்கு இடையி லான ஆட்டத்தில் ஆந்திரம் 5-0 என்ற கோல் கணக்கில் அந்த மானை பந்தாடியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு கோல்களை அடித்த ஆந்திரம், 2-வது பாதி ஆட்டத்தில் 3 கோல்களை அடித் தது. ஆந்திர வீரர் சசாங் ஹாட்ரிக் கோலடித்தார். தனது முதல் கோலை 18-வது நிமிடத்தில் அடித்த சசாங், 2-வது கோலை 58-வது நிமிடத்திலும், 3-வது கோலை 77-வது நிமிடத்திலும் அடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x