Published : 11 Feb 2014 11:03 AM
Last Updated : 11 Feb 2014 11:03 AM
7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய அணிக்காக புத்துணர்ச்சியோடு விளையாட காத்திருக்கிறேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய பிரக்யான் ஓஜா இந்த முறை அந்த அணியால் தக்கவைத்துக் கொள்ளப்படாதபோதும், மும்பை அணியின் மீது குறைபட்டுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
ஓர் அணி ஒரு வீரரை தக்கவைத்துக் கொள்வது என்பது அந்த வீரரின் கையில் இல்லை. மும்பை அணி என்னை தக்கவைத்துக்கொள்ளாததால் நான் எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. ஐபிஎல் ஏலப் பட்டியலில் இப்போதும் நான் இருக்கிறேன்.
நான் மோசமாக விளையாடி சம்பந்தப்பட்ட அணியினர் என்னை நீக்கியிருந்தால் நான் வருத்தமடைந்திருப்பேன். ஆனால் நான் மும்பை அணிக்காக சிறப்பாகத்தான் விளையாடினேன். ஏலத்தின்போது எந்த அணி என்னைத் தேர்வு செய்தாலும் அந்த அணிக்காக 100 சதவீதம் சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன்.
நான் ஒரு தொழில்முறை வீரர். என்னை அணியில் சேர்க்காததற்காக உணர்ச்சி வசப்பட மாட்டேன். சேர்ப்பதும், நீக்கப்படுவதும் விளை யாட்டின் ஒரு பகுதி. அதனால் அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட அணிதான் எனது பங்களிப்பை இழக்கும். நான் எந்த அணியை யும் இழந்துவிட்டதாக நினைக்கமாட்டேன். ஏலத்தின்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்றார்.
மும்பை அணி ரோஹித் சர்மா, லசித் மலிங்கா, கிரண் போலார்ட், ஹர்பஜன் சிங், அம்பட்டி ராயுடு ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்ட அதேவேளையில் ஓஜா, மிட்செல் ஜான்சன், தினேஷ் கார்த்திக், டுவைன் ஸ்மித் ஆகியோரை தக்க வைக்கவில்லை. எனினும் மும்பை அணியிடம் ஒரு “மேட்ச் கார்டு” உள்ளதால் அதன்மூலம் மேற்கண்ட வீரர்களில் ஒருவரை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 வீரர்களில் ஓஜாவும் ஒருவர் ஆவார். ஐபிஎல் போட்டியில் முதல் 4 சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ஓஜா, அடுத்த இரு சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடினார்.
அது தொடர்பாக பேசிய ஓஜா, “ஹைதராபாத், மும்பை என இரு அணிகளுக்காகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். அவர்களால் விரும்பப்படும் வீரராகவே இருக்கிறேன். அதனால் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கோ அல்லது மும்பை இண்டியன்ஸ் அணிக்கோ நான் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என நம்புகிறேன்” என்றார்.
மும்பை அணி ஏற்கெனவே தங்கள் அணியில் விளையாடிய ஒருவரை தேர்வு செய்வதற்காக ஒரு “மேட்ச் கார்டு” வைத்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை எனக் கூறிய ஓஜா, “மேட்ச் கார்டு இருந்தாலும், ஏலத்தின்போது என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது மும்பையை அணியைப் பொறுத்ததாகும். அந்த இரு அணிகளுக்காக நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். எனினும் ஏலத்தை கட்டுப்படுத்த முடியாது. எந்த அணி நம்மை தேர்வு செய்தாலும், அவர்களுக்காக நாம் விளையாட வேண்டும். அதுதான் சிறந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT