Published : 26 Mar 2014 11:52 AM
Last Updated : 26 Mar 2014 11:52 AM
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான கோகோ வான்டேவெக்கை தோற்கடித்தார்.
1 மணி நேரம் 18 நிமிடங்களில் வான்டேவெக்கை வீழ்த்திய செரீனா, மியாமி மாஸ்டர்ஸில் 13-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி கண்ட பிறகு பேசிய செரீனா, “இது மிகக் கடினமான போட்டி” என்றார்.
செரீனா தனது காலிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை சந்திக்கிறார். ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 1-6, 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எக்டெரினா மகரோவாவைத் தோற்கடித்தார்.
இதுவரை செரீனாவும், கெர்பரும் 4 முறை மோதியுள்ளனர். அதில் செரீனா 3 முறையும், கெர்பர் ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளனர். அது தொடர்பாக பேசிய செரீனா, “ஆரம்பத்தில் ஆடியதைவிட இப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். அதனால் வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்” என்றார்.
ஷரபோவா வெற்றி
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மரியா ஷரபோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிறிஸ்டன் ஃபிலிப்கின்ஸைத் தோற்கடித்தார். 2 மணி நேரம், 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில்
இழந்த ஷரபோவா, பின்னர் நடைபெற்ற இரு செட்களிலும் அபாரமாக ஆடி வெற்றி கண்டார். முதல் செட்டில் மட்டும் 10 டபுள் பால்ட் தவறுகளை செய்தார் ஷரபோவா.
ஷரபோவா அடுத்ததாக செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவரான விட்டோவா 3-6, 6-0, 6-0 என்ற செட் கணக்கில் செர்பியாவின் அனா இவானோவிச்சை தோற்கடித்தார். இதேபோல் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா
6-1, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
நடால், வாவ்ரிங்கா வெற்றி
ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை சந்திக்கிறார். ஃபாக்னினி தனது 3-வது சுற்றில் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட்டைத் தோற்கடித்தார். ஸ்விட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 3-வது சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வேஸலினைத் தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “நான் 3-வது சுற்றில் விளையாடியவிதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். வாவ்ரிங்கா அடுத்ததாக உக்ரைனின் அலெக்சாண்டர் டோல் கோபோலோவுடன் மோதவுள்ளார். டோல்கோபோலோவ் 3-6, 6-0, 7-6 (5) என்ற செட் கணக்கில் செர்பியாவின் துசன் லஜோவிக்கை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் உள்பட இரண்டு பட்டங்களை வென்றுள்ள வாவ்ரிங்கா, 2009-ம் ஆண்டு நடைபெற்ற மியாமி மாஸ்டர்ஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியிருந்தார். அதன்பிறகு இப்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
கனடாவைச் சேர்ந்த அதிரடி சர்வீஸ் மன்னனான மிலோஸ் ரயோனிச்சும் 4-வது சுற்றை உறுதி செய்துள்ளார். அவர் தனது 3-வது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் குயிலர்மோ கிரேஸியா லோபஸை தோற்கடித்தார். கடந்த இரு மியாமி மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் காயம் காரணமாக 3-வது சுற்றோடு வெளியேறிய ரயோனிச், முதல்முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT