Last Updated : 08 Oct, 2013 12:17 PM

 

Published : 08 Oct 2013 12:17 PM
Last Updated : 08 Oct 2013 12:17 PM

மறக்க முடியாத பிரியா விடை!

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் மோதிய அணிகளே கடைசி ஆட்டத்திலும் மோதின. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்ல, கடைசி ஆட்டத்தில் அதைத் தோற்கடித்துப் பழிதீர்த்துக்கொண்டது மும்பை இந்தியன்ஸ். கூடவே கோப்பையையும் தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டிக்கு வந்த இரு அணிகளின் பயணங்களும் சுவாரஸ்யமானவை. இரு அணிகளிலும் உள்ள முக்கியமான இரண்டு ஆட்டக்காரர்கள் இந்தப் போட்டித் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்கள். ராஜஸ்தான் அணியின் தலைவர் ராகுல் திராவிட் ஏற்கனவே கிரிக்கெட்டின் இதர வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த இறுதிப் போட்டியே அவரது கடைசிப் போட்டி. மும்பை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரும் இனி 20 ஓவர் போட்டிகளில் ஆட மாட்டார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவார். ஆக, இருவருக்குமே இது வண்ணச் சீருடையில் ஆடும் கடைசி ஆட்டம்.

முதல் ஆட்டத்தில் வென்ற ராஜஸ்தான் அடுத்து வந்த எல்லாப் போட்டிகளிலும் வென்று கம்பீரமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் மட்டுமே தோற்றது.

முதல் போட்டியில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிறகு எந்தப் போட்டியிலும் தோற்கவில்லை. ஒடாகோ அணியுடனான அதன் அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஹைவெல்ட் லயன்ஸ் அணியுடனான போட்டியில் வென்றது. அடுத்த போட்டி பெர்த் ஸ்கார்ச்சர்ஸுடன். அதில் பெருத்த வித்தியாசத்தில் வென்றால்தான் அரை இறுதிக்குப் போக முடியும் என்ற நிலையில் போராடியது. நெருக்கடி முற்றும் நேரத்தில் நாயகன் உருவெடுப்பான் என்ற பொதுவான நம்பிக்கைக்கு ஏற்ப ரோஹித் ஷர்மா தன் ஆட்டத்தைக் காட்டினார். ட்வைன் ஸ்மித் போட்டுக் கொடுத்த அஸ்திவாரத்தின் மீது வெற்றிக் கோட்டையை எழுப்பினார். 34 ரன்களுக்கு 2 விக்கெட் பறிபோன நிலையில் ஆட வந்த ரோஹித் எதிரணியை நொறுக்கினார். 24 பந்துகளில் 51 ரன் எடுத்தார். கிரன் பொல்லார்டும் (23) அம்பட்டி ராயுடுவும் (14) கை கொடுக்க, 13.2 ஓவர்களில் மும்பை வென்றது. 150 ரன் என்னும் இலக்கை 13.2 ஓவர்களில் எடுத்து அரை இறுதியை எட்டியது.

முதல் சுற்றில் அட்டகாசமாக முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் போட்டியில் ட்ரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியிடம் அதிர்ச்சிகரமான வகையில் தோற்றது. முதலில் ஆடிய அந்த அணி வெறும் 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. எட்டுப் பேர் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இரண்டு பேர் கணக்கையே தொடங்காமல் ஆட்டமிழந்தார்கள். ட்ரினிடாட் அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 15.1 ஓவர்களில் அலட்டிக்கொள்ளாமல் வென்றது.

இந்த அதிர்ச்சி அரை இறுதியிலும் பிரதிபலித்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியை 159 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தள்ளாடியது. 100ஐத் தாண்டுவதே சந்தேகம் என்ற நிலையில் இருந்த சென்னைக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டம் புத்துயிர் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அஸ்வின் கரை சேர்த்துவிடுவார் என்றுகூடத் தோன்றியது. கடைசி ஓவரில் 23 ரன் தேவை. ஃபாக்னர் வீசிய முதல் பந்தில் அஸ்வின் சிக்ஸர் அடித்தார். இன்னும் 5 பந்துகளில் 17. சென்னை ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. ஆனால் அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்னை மட்டும் கொடுத்த ஃபாக்னர் நான்காவது பந்தில் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தி அவரது ஆட்டத்தையும் சென்னை அணியின் நம்பிக்கையையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அரை இறுதி மும்பைக்குச் சற்று எளிதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அதுவரை சரியாக ஆடாமல் இருந்த சச்சின் இந்தப் போட்டியில் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான் இந்த ஆட்டத்தின் முக்கிய அம்சம். முதல் சில பந்துகளில் தடுமாறிய சச்சின் ஆஃப் ஸ்டெம்புக்குச் சற்று வெளியே முழு அளவில் வீசப்பட்ட ஒரு பந்தை அனாயாசமாக ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் செய்து எல்லைக்கோட்டுக்கு அனுப்பினார். அந்த ஷாட் அடித்த பிறகு அவர் உடல் மொழியில் ஆசுவாசமும் திருப்தியும் தெரிந்தன. அதன் பிறகு அபாரமான இரண்டு சிக்ஸர்கள், நளினமான பவுண்டரிகள் என்று சரளமாக ஆட ஆரம்பித்தார். 21 பந்துகளில் 35 ரன் எடுத்து அவர் ஆட்டமிழந்தபோது அணி வசதியான நிலையை எட்டியிருந்தது. மீதி சம்பிரதாயங்களை ரோஹித்தும் கார்த்திக்கும் முடித்துவைத்தார்கள்.

மும்பை அணியில் அனேகமாக எல்லா ஆட்டங்களிலும் நன்றாக ஆடிய ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் அவர் தொடக்க ஆட்டக்காரர் ட்வைன் ஸ்மித். ராஜஸ்தானுடனான முதல் ஆட்டத்தைத் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் அவர் மட்டை பிரகாசித்தது. இதைத் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் மும்பை வென்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது இவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணரலாம்.

இறுதி ஆட்டத்தில் வழக்கம்போல ஸ்மித், ரோஹித் ஆகியோர் நன்றாக ஆடினாலும் க்லென் மேக்ஸ்வெல் கிளப்பிய சூறாவளிதான் மும்பையின் பக்கம் போட்டியைத் திருப்பியது. 14 பந்துகளில் 37 ரன் எடுத்த இவரது இன்னிங்ஸ்தான் மும்பையின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

202 என்னும் இலக்கைத் துரத்திய ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும் அஜிங்க்ய ரஹானேயும் (65) சஞ்சு சாம்சனும் (60) ஆடிய பேயாட்டம் மும்பை அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ப்ரக்ஞான் ஓஜாவின் பந்து வீச்சில் சாம்சன் கொடுத்த கேட்சை ஹர்பஜன் சிங் பிடித்தபோது மும்பையின் நம்பிக்கை துளிர் விட்டது. அடுத்த நான்கு ஓவர்களுக்குள் ஷேன் வாட்சனும் ரஹானேயும் ஆட்டமிழந்ததில் ராஜஸ்தானின் ஆவேசம் அடங்கியது. அதன் பிறகு திராவிட் உள்பட அனைவரும் வருவதும் போவதுமாக இருந்ததில் மும்பை இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை அணி சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று 20 ஓவர் போட்டிகளின் மன்னனாகத் திகழ்கிறது.

ஆறு வாரங்களுக்கு நீளும் ஐ.பி.எல்.லோடு ஒப்பிடுகையில் இரண்டே வாரங்களில் கச்சிதமாக முடிந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பரபரப்புக்குக் குறைவில்லை. மும்பையின் ரோஹித், ஸ்மித் ஆகியோரைத் தவிர ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் பிரவீண் தாம்பே, சன் ரைஸர்ஸ் அணியின் ஷிகர் தவன், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் பிரகாசித்தார்கள். பொல்லார்டும் அஸ்வினும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. அதிரடிக்குப் பேர்போன தோனியின் மட்டையிலிருந்து ஒரு ஆட்டத்தில் மட்டுமே ரன்கள் 'ஆறாய்ப்' பெருகின. பழைய வீச்சைத் திரும்பப் பெறப் போராடிவரும் ஹர்பஜன் கடைசி ஆட்டத்தில் மூன்று விக்கெட் எடுத்ததன் மூலம் தன் வீரியம் இன்னமும் குறையவில்லை என்பதைக் காட்டினார்.

ராஜஸ்தான் அணி திராவிடுக்கும் மும்பை அணி சச்சினுக்கும் கௌரவமான முறையில் பிரியா விடை கொடுக்கும் வகையில் ஆடியதுதான் இந்தப் போட்டித் தொடரின் மறக்க முடியாத அம்சம். இன்னும் ஒரு வாரத்தில் எல்லோர் கவனமும் இந்திய - ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டித் தொடரை நோக்கித் திரும்பிவிடும். என்றாலும் தாங்கள் பங்கு பெற்ற அணிகளுக்குப் பெருமையாகத் திகழ்ந்த இந்த இரு ஜாம்பவான்களால் இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி ரசிகர்கள் மனதில் அழியாமல் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x