Published : 08 Feb 2014 10:08 AM
Last Updated : 08 Feb 2014 10:08 AM
இலங்கை – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆட்டத்தின் கடைசி தினமான நாளை 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இலங்கை வெற்றி பெறும். அதே நேரத்தில் மேலும் 455 ரன்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி பெறும் என்ற சூழ்நிலை உள்ளது.
முதல் இன்னிங்ஸில் முச்சதம் அடித்த இலங்கை வீரர் சங்ககாரா, இரண்டாவது இன்னிங்ஸில் 105 ரன்கள் எடுத்தார். முன்னதாக 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த வங்கதேசம் 426 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இலங்கை தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணாரத்னே, குசல் சில்வா ஆகியோர் முறையே 15 மற்றும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் சங்ககாரா, ஜெயவர்த்தனே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் விரைவிலேயே பிரிந்தது. ஜெயவர்த்தனே 11 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 78 ஆக இருந்தது.
அடுத்து சங்ககாராவுடன், சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 37-வது ஓவரில் இலங்கை 100 ரன்களைக் கடந்தது. இருவரும் அரைசதம் கடந்த பின்னர் சற்று வேகமாக விளையாடி ரன் குவிக்கத் தொடங்கினர்.
101 பந்துகளில் அரைசதம் கடந்த சங்ககாரா, 143-வது பந்தில் சதமடித்தார். எனினும் 105 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் மேத்யூஸ் களமிறங்கினார். மறுமுனையில் 158 பந்துகளில் சண்டிமால் சதமடித்தார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 305 ஆக இருந்தது.
இந்த சூழ்நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இலங்கை அறிவித்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 161 ரன்கள் முன்னிலை மற்றும் 2-வது இன்னிங்ஸில் எடுத்த 305 ஆகியவற்றை சேர்த்து 446 ரன்கள் இலங்கை முன்னிலை பெற்றது.
இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் தனது 2-வது இன்னிங்ஸில் களமிறங்கியது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 12 ரன்களை வங்கதேசம் எடுத்துள்ளது.
இன்று நடைபெறும் 5-வது நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெற முடியும். அதே நேரத்தில் வங்கதேசம் இந்த இலக்கை எட்ட முடியாது என்பதால் ஆட்டத்தை டிரா செய்ய முயற்சிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT