Published : 26 Jan 2014 11:20 AM
Last Updated : 26 Jan 2014 11:20 AM

பரபரப்பான ஆட்டத்தை ‘டை’யில் முடித்தார் ஜடேஜா

இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி “டை”யில் முடிந்தது. இதனால் தொடரை சமனில் முடிக்கும் வாய்ப்பை தக்கவைத்தது இந்தியா.

இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆண்டர்சன் வீசிய அந்த ஓவரில் ஜடேஜா இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசி போட்டியை “டை”யில் முடித்தார்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி இந்த முறையும் பீல்டிங்கையே தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டிலும், ரைடரும் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர்.

அதிரடி தொடக்கம்

புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் பறந்தன. இதனால் 4 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. எனினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரைடர், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு 153

இதையடுத்து கப்டிலுடன் இணைந்தார் கேன் வில்லியம்சன். சிறப்பாக ஆடிய கப்டில் 80 பந்துகளிலும், வில்லியம்சன் 61 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். சமி வீசிய 31-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த வில்லியம்சன், அடுத்த பந்தில் ரெய்னா விட்ட கேட்ச்சால் வாழ்வு பெற்றார். அதே ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸரையும், கடைசிப் பந்தில் பவுண்டரியையும் அடித்த வில்லியம்சன், சமி வீசிய ஆட்டத்தின் 33-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அவர் 74 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்தது.

கப்டில் 5-வது சதம்

இதையடுத்து வந்த ஆண்டர்சன், அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்த கையோடு, அதே ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு ராஸ் டெய்லர் களமிறங்க, மறுமுனையில் கப்டில் 5-வது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 123 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார்.

இதன்பிறகு வேகம் காட்டிய கப்டில் மேலும் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டிய பிறகு ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 129 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் டக்அவுட் ஆக, டெய்லருடன் இணைந்தார் லியூக் ரோஞ்சி. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ரோஞ்சி, சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்டினார். மறுமுனையில் வேகம் காட்ட முயன்ற டெய்லர் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த நாதன் மெக்கல்லம் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

314 ரன்கள் குவிப்பு

இதன்பிறகு லியூக் ரோஞ்சியும் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த மெக்லீனாகான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, டிம் சௌதியுடன் இணைந்தார் ஹாமிஷ் பென்னட். அபாரமாக ஆடிய டிம் சௌதி 23 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து 314 ரன்கள் குவித்தது. டிம் சௌதி அடித்த பந்து புவனேஸ்வர் குமாரின் கையில் பட்டு சிக்ஸரானது. ஒருவேளை அது கேட்ச் ஆகியிருந்தால் நியூஸிலாந்து 289 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியிருக்கும்.

சிறப்பான தொடக்கம்

315 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவண்-ரோஹித் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. 25 பந்துகளைச் சந்தித்த தவண் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா சரிவுக்குள்ளானது. ரோஹித் சர்மா 39 ரன்களிலும் (38 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன்), பின்னர் வந்த விராட் கோலி 6 ரன்களிலும் (20 பந்துகளில்), அஜிங்க்ய ரஹானே 3 ரன்களிலும் அவுட்டாக, 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

சரிவிலிருந்து மீட்ட தோனி

5-வது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், ரெய்னாவும் 60 பந்துகளில் 67 ரன்கள் சேர்க்க, இந்தியா ஓரளவு மீண்டது. ரெய்னா 39 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 27.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து தோனியுடன் இணைந்தார் அஸ்வின். இந்த ஜோடி 38 ரன்கள் சேர்த்தது. 59 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட தோனி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அஸ்வினின் முதல் 50

இதைத்தொடர்ந்து அஸ்வினுடன் இணைந்தார் ஜடேஜா. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 14.2 ஓவர்களில் 131 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. வெற்றி இலக்கை கண்டு சற்றும் மலைக்காத அஸ்வினும், ஜடேஜாவும் நியூஸிலாந்து பௌலர்களை பந்தாடினர். இதனால் பவுண்டரிகள் பறந்து கொண்டேயிருந்தன. அஸ்வின் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் அரைசதமாகும்.

தொடர்ந்து இருவரும் வேகமாக ஆட, கடைசி 6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 45-வது ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்தார். நாதன் மெக்கல்லம் வீசிய 45-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய அஸ்வின், 5-வது பந்தையும் சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லையில் நின்ற கப்டில் அதை அற்புதமாகக் கேட்ச் செய்தார். 46 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்தது. அஸ்வின் ஆட்டமிழந்தது இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

பரபரப்பு

இதன்பிறகு வந்த புவனேஸ்வர் குமார் 4, முகமது சமி 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜாவுடன் இணைந்தார் வருண் ஆரோன். தனிநபராகப் போராடிய ஜடேஜா, 38 பந்துகளில் அரைசதம் கண்டார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப் பட்டன. ஆண்டர்சன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, அடுத்த இரு பந்துகளை வீணடித்தார். ஆக்ரோஷமாக பந்துவீசிய ஆண்டர்சன் இரு வைடுகளை வீசியதால், கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-வது பந்தில் பவுண்டரியையும், 5-வது பந்தில் சிக்ஸரையும் விரட்டிய ஜடேஜா, கடைசிப் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, ஆட்டம் டையில் முடிந்தது.

ஜடேஜா 45 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து 2-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த ஒருநாள் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அடுத்த இரு போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் தொடரை சமனில் முடிக்க முடியும். 4-வது போட்டி வரும் 28-ம் தேதி ஹாமில்டனிலும், 5-வது போட்டி வரும் 31-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x