Published : 16 Nov 2013 04:06 PM Last Updated : 16 Nov 2013 04:06 PM
சச்சின், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர்.
முதல் விளையாட்டு வீரர்...
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரத ரத்னாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் நபர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சச்சின் பேசியபோது, இந்த விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
3-வது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்...
பேராசிரியர் சிந்தாமணி நகேச ராமச்சந்திர ராவ் (சி.என்.ஆர். ராவ்), வேதியியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானி. இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
சர் சி.வி.ராமன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தற்போது அவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவராக உள்ளார். செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்துக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்.
4 ஆண்டுகளுக்குப் பின்…
கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 1954 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 41 பேர் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர். கடைசியாக ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷிக்கு கடந்த 2009-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சச்சினுக்கும் சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 42-வது நபராக சி.என்.ஆர். ராவும், 43-வது நபராக சச்சினும் விருதினைப் பெற உள்ளனர்.
WRITE A COMMENT