Published : 23 Sep 2013 01:15 PM
Last Updated : 23 Sep 2013 01:15 PM
தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற கொரிய ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அக்னீஸ்கா 6-7 (6), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனாஸ்டாசியாவை தோற்கடித்தார்.
2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அக்னீஸ்காவுக்கு கடும் சவால் அளித்தார் அனாஸ்டாசியா. இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது.
அதில் முதலில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கிய அனாஸ்டாசியா, அதன்பிறகு தொடர்ச்சியாக 4 புள்ளிகளைப் பெற்று அந்த செட்டை 8-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் முதல் செட் 7-6 (6) என்ற கணக்கில் அனாஸ்டாசியா வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய அக்னீஸ்கா, 9 கேம்களிலேயே அந்த செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் அந்த செட் 6-3 என்ற கணக்கில் அக்னீஸ்கா வசமானது.
தொடர்ந்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில், முதல் 9 கேம்கள் வரை இருவரும் தங்களின் சர்வீஸ்களை தக்கவைத்துக் கொண்டனர். 10-வது கேமில் அனாஸ்டாசியாவின் சர்வீஸை முறியடித்த அக்னீஸ்கா, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் 3-வது டபிள்யூடிஏ பட்டத்தையும், ஒட்டுமொத்தத்தில் 13-வது டபிள்யூடிஏ பட்டத்தையும் வென்றுள்ளார் அக்னீஸ்கா.
வெற்றி குறித்துப் பேசிய அக்னீஸ்கா, “சுமார் 3 மணி நேரம் வரை நடைபெற்ற இந்தப் போட்டி மிகச்சிறந்த போட்டியாகும். அதில் வெற்றி கண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் போட்டியில் 3 செட்களுமே கடினமானதாக இருந்தன.
எனினும் இக்கட்டான நேரத்தில் நான் கொஞ்சம் சிறப்பாக விளையாடியதால் வெற்றி காண முடிந்தது” என்றார்.
இறுதிச்சுற்றில் அக்னீஸ்கா வுக்கு கடும் நெருக்கடியளித்த அனாஸ்டாசியா அது குறித்துப் பேசுகையில், “நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது ஏமாற்றமளிக்கிறது.
டென்னிஸை பொறுத்த வரையில் சில நேரங்களில் ஏற்றத்தையும், சில நேரங்களில் இறக்கத்தையும் சந்திப்பது சகஜம்தான். சில நேரங்களில் நீங்கள் தோற்கலாம், சில நேரங்களில் நீங்கள் ஜெயிக்கலாம்.
எனினும் எனது சிறப்பான ஆட்டத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த வாரம் எனக்கு சிறப்பானதாக அமைந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதுவும் இறுதி ஆட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT