Published : 17 Mar 2014 12:07 PM
Last Updated : 17 Mar 2014 12:07 PM
ஆஸ்திரேலிய கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவரும், ஜெர்மனி வீரருமான நிகோ ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார்.
அதேநேரத்தில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல், முதல் வரிசையில் (போல் பொசிசன்) இருந்து புறப்பட்ட லீவிஸ் ஹாமில்டன் ஆகியோர் தங்களின் காரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆரம்பத்திலேயே போட்டியிலிருந்து விலகினர்.
2014 சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளைக் கொண்டது. அதன் முதல் சுற்று ஆஸ்திரேலிய கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் ஆஸ் திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெர்க்கிற்கு 4-வது வெற்றி
மொத்தம் 57 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் 1 மணி நேரம், 32 நிமிடங்கள், 58.710 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். ஃபார் முலா 1 போட்டியில் ரோஸ்பெர்க் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். கடந்த சீசனில் பிரிட்டன் கிராண்ட்ப்ரீ போட்டியில் முதலிடத்தைப் பிடித்த ரோஸ்பெர்க், அதன்பிறகு இப்போது வெற்றி கண்டுள்ளார்.
ரெட்புல் அணிக்காக முதல் முறையாக பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய டிரைவர் டேனியல் ரிச்சியார்டோ 2-வது வரிசையில் இருந்து புறப்பட்டார். அவர் முதலிடத்தைப் பிடிக்க ரோஸ்பெர்க்குடன் கடுமையாகப் போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 1 மணி நேரம், 33 நிமிடங்கள், 24.235 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடத்தைப் பிடித்தார். மெக்லாரன் டிரைவர் கெவின் மேக்னஸன் (1 மணி நேரம், 33 நிமிடங்கள் 25.487 மைக்ரோ விநாடிகளில்) 3-வது இடத்தைப் பிடித்தார்.
சரிவிலிருந்து மீண்ட போட்டாஸ்
மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன், ஃபெராரி டிரைவர் அலோன்ஸா, வில்லியம்ஸ்-மெர்ஸிடஸ் டிரைவர் வால்டெரி போட்டாஸ் ஆகியோர் முறையே 4, 5, 6-வது இடங்களைப் பிடித்தனர்.
போட்டாஸ் தகுதிச்சுற்றில் 10-வது இடத்தைப் பிடித்தபோதும் கியர் பாக்ஸை மாற்றியதற்கு தண் டனையாக 5 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் 15-வது வரிசையில் இருந்து புறப்பட்ட அவர் 10-வது சுற்றின்போது தடுப்பு சுவரின் மீது மோதினார். அதனால் அவருடைய காரின் பின்பகுதியில் உள்ள வலதுபுற டயர் கழன்றது. இதையடுத்து பாதுகாப்பு கார் வரவழைக்கப்பட்டு, அதன்பிறகு புதிய டயர் மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் களம்புகுந்த போட்டாஸ் 6-வது இடத்தைப் பிடித்தார்.
கார்கள் பழுது
மெர்ஸிடஸ் டிரைவர் ரோஸ்பெர்க் முதலிடத்தைப் பிடித்தபோதிலும், அந்த அணியின் மற்றொரு டிரைவரும் முன்னணி வீரருமான லீவிஸ் ஹாமில்டன் தனது காரில் ஏற்பட்ட பழுது காரணமாக முதல் 2 சுற்றுகளோடு போட்டியிலிருந்து வெளியேறினார். இதேபோல் நடப்பு சாம்பியனும், தொடர்ந்து 4 முறை பட்டம் வென்றவருமான ரெட்புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் 3-வது சுற்றோடு காரில் ஏற்பட்ட பழுது காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
போட்டியில் பங்கேற்ற 22 கார்களில் 11 கார்கள் 57 சுற்று களையும் கடந்து இலக்கை எட்டின. வில்லியம்ஸ்-மெர்ஸிடஸ் டிரைவர் ஃபெலிப் மாஸா, கேட்டர்ஹாம் டிரைவர் கமுய் கோபயாஷி ஆகியோரின் கார்கள் முதல் சுற்றின் முதல் வளைவிலேயே ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இது தொடர்பாக விசாரணை நடத்தப் படும் என ஃபார்முலா 1 அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT