Published : 27 Mar 2014 11:25 AM
Last Updated : 27 Mar 2014 11:25 AM
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை வெற்றி பெற்றால் 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு செல்வதை உறுதி செய்துவிடும்.
அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இப்போட்டியில் வெற்றி பெறப் போராடும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பானதாக அமையும்.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக அயர்லாந்தை 39 ரன்களுக்குள் சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக இலங்கை உள்ளது. முக்கியமாக மேத்யூஸ் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தி வருகிறார். தொடக்கவீரர் பெரேரா, தில்ஷான், சங்ககாரா, ஜெயவர்த்தனா ஆகியோரது பேட்டிங் தொடர்ந்து சிறப்பாக உள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இங்கிலாந்தை வென்றால் குரூப் 1-ல் இருந்து முதல் அணியாக இலங்கை அரையிறுதிக்கு செல்வதை உறுதி செய்யும். எனவே வெற்றிக்காக இலங்கை வீரர்கள் முழு உத்வேகத்துடன் களமிறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகக் கோப்பை போட்டியை ஏமாற்றத்துடனேயே தொடங்கியுள்ளது இங்கிலாந்து. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங்செய்து 172 ரன்கள் குவித்த போதிலும் மழை பெய்ததால் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் முழுமையாக நடைபெற்றால் இங்கிலாந்து வெற்றி பெறக் கூட வாய்ப்பு இருந்திருக்கும்.
இப்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வென்று தனது வெற்றிக் கணக்கைத் தொடங்க இங்கிலாந்து வீரர்கள் விரும்புவார்கள். இப்போட்டி சிட்டகாங்கில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து
முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை நெதர்லாந்து எதிர்கொள்கிறது. இதில் ஏதாவது ஆச்சரியம் நிகழ்ந்தால் மட்டுமே நெதர்லாந்து வெல்ல வாய்ப்பு உள்ளது. மற்றபடி போட்டி முடிவு தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மிகக்கடுமையாகப் போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதன் மூலம் தென்னாப்பிரிக்கா தனது ரன் ரேட்டை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கும். இது அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
இப்போது குரூப் 1-ல் இலங்கை, நியூஸிலாந்துக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா 3-வது இடத்தில்தான் உள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் நெதர்லாந்து படுதோல்வியடைந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT