Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM
ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் முன்னணி வீரரான சேம்தேவ் தேவ்வர்மன் (சர்வதேச தரவரிசை 90) தனது முதல் சுற்றில் தகுதிநிலை வீரரை சந்திக்கிறார்.
தகுதிநிலை வீரர் என்பது மூன்று தகுதிச்சுற்றுகளில் வெற்றி கண்டு பிரதான சுற்றுக்கு முன்னேறும் வீரர் ஆவார். சோம்தேவுடன் மோதும் வீரர் யார் என்பது குறித்து ஞாயிற்றுக் கிழமை மாலையில் தகுதிச்சுற்று நிறைவடையும்போது தெரியவரும். 2014-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கான டிரா (முதல் சுற்றில் யாருடன் யார் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வது) நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
4 பேருக்கு பை
அதன்படி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மிகைல் யூஸ்னி, 3-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னி, 4-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஆகியோருக்கு “பை” வழங்கப்பட்டது. அதனால் அவர்கள் 4 பேரும் முதல் சுற்றில் விளையாடாமல் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்பார்கள். இவர்களில் மிகைல் யூஸ்னி 2008-லும், வாவ்ரிங்கா 2012-லும் சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு சவால்
சோம்தேவ் தனது முதல் சுற்றில் தகுதிநிலை வீரரைச் சந்தித்தாலும், அதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்பட்சத்தில் அதில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் (சர்வதேச தரவரிசை 38) இருக்கும் ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸை சந்திக்க வேண்டியி ருக்கும். அதனால் சோம்தேவுக்கு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கடும் சவால் காத்திருக்கிறது.
வைல்ட்கார்ட் மூலம் சென்னை ஓபனில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் வீரர்களை சந்திக்கின்றனர்.
சர்வதேச தரவரிசையில் 195-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பாப்லோ கரனோ புஸ்டாவையும், சர்வதேச தரவரிசையில் 312-வது இடத்தில் இருக்கும் தமிழக வீரரான ஜீவன் நெடுஞ்செழியன் சர்வதேச தரவரிசையில் 85-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவையும் சந்திக்கின்றனர். எனவே யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகிய இருவரும் முதல் சுற்றை தாண்டுவது அவ்வளவு எளிதல்ல. மொத்தத்தில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் சோம்தேவ் உள்ளிட்ட 3 இந்திய வீரர்களுக்குமே இந்த டிரா கடும் சவாலானதாகவே அமைந்துள்ளது. எனவே அவர்களில் யாராவது ஒருவர் காலிறுதி வரை முன்னேறினால் அது பெரிய விஷயமாக இருக்கும்.
யார் யாருக்கு வாய்ப்பு?
போட்டித் தரவரிசையில் முதலிடத் தில் இருக்கும் வாவ்ரிங்காவும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரும், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டும் ஒரு காலிறுதியில் மோத வாய்ப்புள்ளது. இதேபோல் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னியும் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கனடாவின் வசேக் போஸ்பிஸில்ஸும் மற்றொரு காலிறுதியில் மோத வாய்ப்புள்ளது. இவர்களில் இருவர்தான் அரையிறுதியில் சந்திப்பார்கள்.
பிரான்ஸின் பெனாய்ட் பேர், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸ் ஆகியோர் 3-வது காலிறுதியிலும், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரோஜர் வேஸ்லின், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் மிகைல் யூஸ்னி ஆகியோர் 4-வது காலிறுதியிலும் மோத வாய்ப்புள்ளன. இந்த நால்வரில் இருவர்தான் மற்றொரு அரையிறுதியில் சந்திப்பார்கள்.
சோம்தேவ்
டிரா குறித்துப் பேசிய சோம்தேவ், “என்னுடன் முதல் சுற்றில் மோதுவது யார் என்று தெரியாது. எனினும் அவர் தகுதிச்சுற்றில் 3 ஆட்டங்களில் விளையாடிய பின்னர் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதால் சவால் நிறைந்த எதிராளியாக இருக்க வாய்ப்புள்ளது” என்றார். 2009 சென்னை ஓபனில் வைல்ட்கார்ட் மூலம் விளையாடிய சோம்தேவ், இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. சென்னை ஓபனில் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஒரே இந்தியர் என்பது சோம்தேவ் மட்டுமே.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேர் கூறுகையில், “டிரா கடும் சவாலானதாக அமைந்திருக் கிறது. எனவே யார் சாம்பியன் பட்டம் வெல்வார் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமானது. பட்டம் வெல்வதற்கு இந்த வீரருக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது எனக் கருதமுடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT