Published : 25 Mar 2014 11:51 AM
Last Updated : 25 Mar 2014 11:51 AM
ஐபிஎல் முறைகேடு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் தாமாகவே விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பதவி விலக தவறினால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு எச்சரித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 27-க்கு ஒத்திவைத்தது.
ஐபிஎல் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பிருப் பதாக கூறப்படும் விவகாரத்தில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடக்க வேண்டும் என்றால் சீனிவாசன் பதவி விலகுவது தான் சரியானது என்று அமர்வு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையில் மிக மிக மோசமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலகியாக வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. எதற்காக அவர் பதவியிலேயே ஒட்டிக் கொண்டுள்ளார் என்பது விளங்கவில்லை. அது எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. நீங்களாகவே பதவி விலகாவிட்டால் நாங்கள் அதற்கான உத்தரவை பிறப்பிப்போம்.
ஐபிஎல் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் 6 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளது விசாரணைக் குழு அறிக்கை. இதில் உள்ள விவரங்களை நீதிமன்றத்தில் வெளிப்படையாக அம்பலப்படுத்த முடியாது.
பிசிசிஐ தரப்பு வழக்கறிஞர் இந்த அறிக்கையில் உள்ள சில பத்திகளை பொதுவான கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்தாலே இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் விவரங்கள் எவ்வளவு மோசமானவை என்பதும், இது தொடர்பாக விசாரணை அவசியமானது என்பதும் புரிந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அறிக்கையில் உள்ள விவரங்களையும் கிரிக்கெட் வீரர்கள் பெயரையும் இந்த நீதிமன்றத்தில் வெளியிட வேண்டாம் என விசாரணைக்கு முன்னதாக பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஐபிஎல் முறைகேடு தொடர்பாக பஞ்சாப் ஹரியாணா தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்திருந்தது. ஐபிஎல் ஆட்டங்களின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகார பூர்வ நபர் என்ற முறையில் மெய்யப்பன் முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதாக இந்த விசாரணைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
மெய்யப்பனுக்கு எதிரான பிக்ஸிங் புகார் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் உரிமைதாரரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சீனிவாசன், பதவியா, பந்தமா, யார் பக்கம் தான் நிற்பது என்பது தெரியாமல் திணறினார் என கூறப்படும் புகார் பற்றி உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்றும் விசாரணைக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
சிஎஸ்கே அணியின் அதிகாரி என்ற முறையில் குருநாத் மெய்யப்பன் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டார் என்பதும் அது சம்பந்தமான தகவல்களை பிறருக்கு கொடுத்தார் என்பதும் நிரூபணமாகி இருக்கிறது என்றும் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இந்த விசாரணைக் குழுவில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அணிக்காக விளையாடி வரும் 6 வீரர்கள் பிக்ஸிங், பெட்டிங் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளது தொடர்பாக எழுந்துள்ள சந்தேகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் மீதான பெட்டிங் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆராய்ந்த இந்த கமிட்டி 100க்கும் அதிகமான பக்கம் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்தது.
உரிம ஒப்பந்தத்தின் கீழும் ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிகளின் கீழும் மெய்யப்பனின் செயல்களுக்காக சிஎஸ்கே மீது தடை, தண்டனை நடவடிக்கை எடுக்கப்படலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல்வராக இருந்தவர் மெய்யப்பன். இவரது செயல்கள்தான் ஐபிஎல் ஆட்டத்துக்கு இழுக்கை தேடித்தந்தது.
கிரிக்கெட் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர் மெய்யப்பன் அவ்வளவே. அவரைப் பற்றி வேறு ஏதும் சொல்ல முடியாது என சீனிவாசன் தெரிவித்த கருத்தை விசாரணைக் குழு நிராகரித்துள்ளது. முன்னணி கிரிக்கெட் வீரர் களுக்கு எதிராக ஊகத்தின் அடிப்படையிலும் ஆதாரமில்லாமலும் தொலைக்காட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், இதை தடுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் முன்னதாக பிசிசிஐ வேண்டுகோள் விடுத்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT