Published : 14 Feb 2014 10:23 AM
Last Updated : 14 Feb 2014 10:23 AM
பெங்களூரில் 2-வது நாளாக நடைபெற்ற 7-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ரயில்வே அணியைச் சேர்ந்த லெக் ஸ்பின்னரான கரண் சர்மா ரூ.3.75 கோடிக்கும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ரிஷி தவண் ரூ.3 கோடிக்கும் ஏலம் போயினர்.
சர்வதேச போட்டியில் விளையாடாதவர்களில் (அன்கேப்டு பிளேயர்ஸ்) அதிக விலைக்கு போனது இவர்கள் இருவரும்தான். கரண் சர்மாவை சன்ரைஸர்ஸ் அணியும், ரிஷி தவணை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தன.
கரணுக்கு கடும் போட்டி
கடந்த சீசனில் 11 விக்கெட்டு களை வீழ்த்திய கரண் சர்மாவுக்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை வாங்குவதற்கு ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் போட்டியிட்டன. அவரை ரூ.70 லட்சத்துக்கு சூப்பர் கிங்ஸ் ஏலம் கேட்டபோது, டெல்லி போட்டியிலிருந்து விலகியது. இதையடுத்து ரூ.75 லட்சம் எனக்கூறி போட்டியில் குதித்தது பஞ்சாப்.
இதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை கைவிட்டது. ஆனால் பஞ்சாபுக்கு போட்டியாக சன்ரைஸர்ஸ் ரூ.1 கோடி எனக்கூறி ஏலத்தில் நுழைய, மறுகணமே கரண் சர்மாவின் விலை ரூ.2 கோடியை எட்டியது. தொடர்ந்து இரு அணிகளும் போட்டா போட்டியிட, ரூ.3 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஏலம் கேட்டது. இதையடுத்து பஞ்சாப் ரூ.3.50 கோடிக்கு ஏலம் கேட்டது.
எனினும் விடாப்பிடியாக இருந்த சன்ரைஸர்ஸ் இறுதியில் ரூ.3.75 கோடிக்கு கரண் சர்மாவை வாங்கியது. 6-வது ஐபிஎல் போட்டியிலும் கரண் சர்மா சன்ரைஸர்ஸுக்காகவே விளையாடினார்.
மெதுவாக சூடுபிடித்த ரிஷி தவண்
இதன்பிறகு ரிஷி தவணின் பெயர் ஏலத்தில் வந்தபோது, அவரை வாங்க ஆரம்பத்தில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அவரை விலை போகாதவர் என நடுவர் அறிவிக்கவிருந்த நிலையில், சன்ரைஸர்ஸ் ஏலம் கேட்டது. இதையடுத்து மும்பை ரூ.40 லட்சத்துக்கு கேட்க, அதைத்தொடர்ந்து டெல்லி ரூ.70 லட்சத்துக்கு கேட்டது.
இதன்பிறகு எல்லா அணிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தானும், பஞ்சாபும் தவணுக்காக போட்டி போட்டன. ஒரு கட்டத்தில் பஞ்சாப் ரூ.3 கோடி என ஏலம் கேட்க, ராஜஸ்தான் போட்டியிலிருந்து விலகியது. இதனால் ரிஷி தவண் பஞ்சாப் வசமானார். ரிஷி தவண், சமீபத்தில் முடிவடைந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். அவர் மொத்தம் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கேதாருக்கு ரூ.2 கோடி
இதன்பிறகு டெல்லி அணி கேதார் ஜாதவ், நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோரை தலா ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான கேதார் ஜாதவை “மேட்ச் கார்டை” பயன்படுத்தி ஏலம் எடுத்தது டெல்லி. ராஸ் டெய்லர் முதல் நாளில் ஏலம் போகாத நிலையில் 2-வது நாளான வியாழக்கிழமை அடிப்படை விலைக்கே ஏலம் போனார். நெதர்லாந்தின் ரியான் டென்தாஸ்சாத்தேவை ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. கடந்த சீசனிலும் அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
ரூ.262.6 கோடி
இரண்டாவது நாளில் மொத்தம் 84 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இவர்களை ஏலம் எடுப்பதற்காக ரூ.50.25 கோடி செலவிடப்பட்டது. இரு நாள்கள் நடைபெற்ற ஏலத்தின் மூலம் 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 154 வீரர்கள் 8 அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மொத்தம் ரூ.262.6 கோடி செலவிடப்பட்டது.
இதுதவிர மேலும் 24 வீரர்களை ஏற்கெனவே அவர்கள் விளையாடிய அணிகள் தக்கவைத்துக்கொண்டன. இவர்களுக்கான தொகை இந்த 262.6 கோடியில் அடங்காது. இதன்மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் 178 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணியும் ஏற்கெனவே தங்கள் அணிக்காக விளையாடிவர்களில் அதிகபட்சமாக 5 பேரை தக்கவைக்கலாம் என அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி இப்போது 24 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் 5 பேரைத் தக்கவைத்துள்ளன. அதன்படி முதல் வீரருக்கு ரூ.12.5 கோடியும், 2-வது வீரருக்கு ரூ.9.5 கோடியும், 3-வது வீரருக்கு ரூ.7.5 கோடியும், 4-வது வீரருக்கு ரூ.5.5 கோடியும், 5-வது வீரருக்கு ரூ.4 கோடியும் சம்பந்தப்பட்ட அணிகள் வழங்க வேண்டும்.
ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுமா?
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் 7-வது ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நிர்வாகிகள் கூறுகையில், “ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை 7-வது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.
ஆனால் போட்டி இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்பது குறித்து அடுத்த வாரம்தான் தெரியவரும். ஐபிஎல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அடுத்த வாரம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது போட்டி எங்கு நடைபெறும் என்பது உறுதி செய்யப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT