Published : 20 Mar 2014 12:15 PM
Last Updated : 20 Mar 2014 12:15 PM
என்னால் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும். எனவே மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
35 வயதாகும் வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக விளையாடி சுமார் ஓராண்டு ஆகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியே அவர் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி ஆட்டமாகும்.
தொடர்ந்து மோசமாக விளையாடிய காரணத்தால் அவர் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணி சேவாக்கை 3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது தொடர்பாக சேவாக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது:
ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லேவன் அணியில் இணைந்துள்ளேன். இதில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் களமிறங்குகிறேன். என்னால் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு வழக்கமான பேட்டிங்கில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நீங்கள் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, எனது உடல் தகுதியையும், பேட்டிங்கையும் மேம்படுத்த தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். பந்துகளை எதிர்கொள்வதில் முன்பு செய்த தவறுகளை திருத்தியுள்ளேன். இதற்காக தினமும் பலமணி நேரம் உழைக்கிறேன்.
2015-ல் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்று நம்புகிறேன். அதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட நான் மேற்கொண்டு வரும் பயிற்சிகள் உதவும். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பதே முக்கியம். அதுவே எனக்கு மகிழ்ச்சியும் அளிக்கும்.
பஞ்சாப் அணியில் இளம் வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் துடிப்புடன் விளையாடுகிறார்கள். எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வதே முதல் இலக்கு. அடுத்ததாக கோப்பையை வெல்வோம். அணியில் எனக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. இந்த ஐபிஎல் போட்டி நிச்சயமாக எனக்கு சிறப்பானதாக அமையும் என்றார் சேவாக்.
இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்தில் படுதோல்வியடைந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோசமாக விளையாடியுள்ளது குறித்தும் சேவாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இந்திய வீரர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நம்மிடம் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.
ஆனால் அனைவரும் தங்கள் முழுத்திறமையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினால்தான் வெற்றி கிடைக்கும்.பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக இருந்தால்தான் 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று சேவாக் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT