Published : 21 Sep 2013 02:51 PM
Last Updated : 21 Sep 2013 02:51 PM

முன்னாள் பிசிசிஐ செயலர் ஜெயந்த் லீலே மரணம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் செயலர் ஜெயந்த் லீலே (75) மாரடைப்பால் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்த லீலே, வியாழக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழிவறைக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். ஒரு கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக, அவர், கடந்த 13-ம் தேதி தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது வைரஸ் தொற்று காரணமாக சுகவீனமாக இருந்தார் என அவருடைய குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான நயன் மோங்கியா கூறுகையில், “லீலே சமீபத்தில்தான் தனது 75-வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்தது துரதிருஷ்டவசமானது. அவர் எனக்கு தந்தையைப் போன்றவர். அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை பெற்றிருக்கிறேன். என்னுடைய 12 வயது முதல் அவர் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார்” என்றார். முதலில் பிசிசிஐ இணைச் செயலராக இருந்த ஜெயந்த் லீலே, பின்னர் பிசிசிஐ செயலராக உயர்ந்தார். இவருடைய பதவிக்காலத்தில்தான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக அப்போதைய கேப்டன் அசாருதீனுக்கு வாழ்நாள் தடையும், துணை கேப்டன் அஜய் ஜடேஜாவுக்கு 5 ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x