Published : 21 Sep 2013 10:01 AM
Last Updated : 21 Sep 2013 10:01 AM
5-வது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது. அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் முதல் போட்டியில் ஐபிஎல் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது.
மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளையாடவுள்ள கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டி இதுவாகும். ராஜஸ்தான் கேப்டன் திராவிடுக்கும் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கலாம். கடந்த ஐபிஎல் போட்டியில் தனது “ஹோம் கிரவுண்ட்” ஆன ஜெய்ப்பூரில் நடைபெற்ற 8 போட்டிகளிலும் வாகை சூடிய திராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணி, இந்த லீக் போட்டியிலும் வெற்றிச் சாதனையை தொடரும் முனைப்போடு மும்பையை எதிர்கொள்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் “ஹோம் கிரவுண்டில்” நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்ற இரு அணிகளில் ராஜஸ்தானும் ஒன்று.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்த ராஜஸ்தான், இப்போது அதிலிருந்து மீண்டு புத்துணர்வோடும், புதிய தெம்புடனும் களம் காணவுள்ளது. ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தால் தங்கள் அணி மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்குவதற்கு சாம்பியன்ஸ் லீக் போட்டி அந்த அணிக்கு நல்ல வாய்ப்பாகும்.
அந்த அணியில் கேப்டன் திராவிட், ஷேன் வாட்சன், அஜிங்க்யா ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியவர்கள். பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கும் வாட்சன், கடந்த ஐபிஎல் போட்டியில் 543 ரன்களைக் குவித்ததோடு, 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரரான அஜிங்க்யா ரஹானே, ராஜஸ்தான் அணியின் பேட்டிங்குக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார். சமீபத்திய காலங்களில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி ரன் குவித்துள்ளார். இதுதவிர பிராட் ஹோட்ஜ், சஞ்ஜூ சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி போன்றோரும் அதிரடியாக விளையாடி ரன் குவிக்கக்கூடியவர்கள். அசோக் மேனரியா, ஜேம்ஸ் பாக்னர் ஆகியோர் பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் வலு சேர்க்கக்கூடியவர்கள்.
ராஜஸ்தான் பௌலர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரும் விளையாடவில்லை. இருப்பினும் ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பாக்னர், ஷான் டெய்ட், பின்னி, கெவோன் கூப்பர் என வலுவான பௌலர்களைக் கொண்டுள்ளது ராஜஸ்தான்.
மும்பை அணி பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் வலுவான அணியாகத் திகழ்கிறது. சச்சின், டுவைன் ஸ்மித், ரோஹித் சர்மா, போலார்ட், தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. இவர்களில் போலார்ட், ஸ்மித், ரோஹித் சர்மா, கார்த்திக் ஆகியோர் தனியொரு ஆளாக களத்தில் நின்று போட்டியின் முடிவுகளை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இலங்கை வீரர் லசித் மலிங்கா இந்த முறை விளையாடாதது மும்பை அணிக்கு பெரும் இழப்பு என்றாலும், மிட்செல் ஜான்சன், நாதன் கோல்டர் நீல், அபு நெசிம், ரிஷி தவன், போலார்ட் ஆகியோர் அந்தக் குறையைப் போக்குவார்கள் என்று நம்பலாம். ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா கூட்டணி சுழற்பந்துவீச்சை கவனிக்கவுள்ளது.
மிரட்டும் மழை
தொடர் மழை காரணமாக போட்டி நடைபெறவுள்ள ஜெய்ப்பூர் மான்சவாய் சிங் மைதானம் ஈரப்பதமாக உள்ளது. சனிக்கிழமையும் இங்கு மழை பெய்வதற்கு 80 சதவீத வாய்ப்புள்ளது. அதனால் வருணபகவான் வழிவிட்டால் மும்பை-ராஜஸ்தான் இடையிலான போட்டி நடைபெறும்.
இது தொடர்பாக ஆடுகள பராமரிப்பாளர் டபோஷ் சாட்டர்ஜி கூறுகையில், “இந்த முறை சராசரியைவிட அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தால் நீரை வெளியேற்றி, மைதானத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து கருவிகளும் எங்களிடம் உள்ளது. ஆனாலும் இயற்கையை நம்மால் மிஞ்ச முடியாது. மைதானம் சற்று மெதுவாகவே இருக்கும்” என்றார்.
10 அணிகள்
மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், லயன்ஸ், பிரிஸ்பேன் ஹீட், ஒடாகோ, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டைட்டன்ஸ், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ என மொத்தம் 10 அணிகள் இப்போட்டியில் விளையாடுகின்றன. இந்த 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 20 லீக் போட்டிகள், 2 அரையிறுதி, இறுதிப் போட்டி என மொத்தம் 23 போட்டிகள் நடைபெறுகின்றன.
அணி விவரம்
ராஜஸ்தான்:
ராகுல் திராவிட் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, கெவோன் கூப்பர், ஜேம்ஸ் பாக்னர், பிராட் ஹோட்ஜ், விக்ரமஜீத் மாலிக், அசோக் மேனரியா, அஜிங்க்யா ரஹானே, சஞ்ஜூ சாம்சன், ராகுல் சுக்லா, ஷான் டெய்ட், பிரவீண் டாம்பே, ஷேன் வாட்சன், திஷந்த் யாக்னிக்.
மும்பை இண்டியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், அபு நெசிம், நாதன் கோல்டர் நீல், ரிஷி தவன், ஹர்பஜன் சிங், மிட்செல் ஜான்சன், தினேஷ் கார்த்திக், கிளன் மேக்ஸ்வெல், பிரக்யான் ஓஜா, அக்சார் படேல், கிரண் போலார்ட், அம்பட்டி ராயுடு, டுவைன் ஸ்மித், ஆதித்ய தாரே.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT