Published : 22 Feb 2014 11:11 AM
Last Updated : 22 Feb 2014 11:11 AM
19 வயதுக்குப்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபையில் சனிக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, இப்போது இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பந்துவீச்சுக்கு சாதகமான சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 245 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூகினியாவை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவான ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்ஜூ சாம்சன் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். அவரின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கேப்டன் விஜய் ஸோல், தொடக்க ஆட்டக்காரர்கள் அங்குஷ் பெய்ன்ஸ், அகில் ஹெர்வாத்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தொடர்ந்து கலக்கி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தை 6 முறை தோற்கடித்துள்ள இந்தியா, ஒருமுறை மட்டுமே அந்த அணியிடம் தோல்வி கண்டுள்ளது. எனினும் 2010-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT