Published : 28 Mar 2014 12:14 PM
Last Updated : 28 Mar 2014 12:14 PM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவராக சுநீல் காவஸ்கரை நியமித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதன்படி ஐபிஎல் போட்டிகளின் போது பிசிசிஐ-யின் தலைவராக காவஸ்கர் செயல்படுவார். ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. முன்னதாக இந்த அணிகளுக்கு தடைவிதிக்கலாம் என்று நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.
ஐபிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி முத்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு நேற்று தனது தீர்ப்பை அறிவித்தது.
பிசிசிஐ-யின் மூத்த துணைத் தலைவரான சிவ்லால் யாதவ், அமைப்பின் மற்ற விவகாரங்களை கவனிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ-யில் இப்போது வர்ண னையாளராக உள்ள காவஸ்கர் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைக்கால தலைவர் பதவியை ஏற்பார். இதற்காக பிசிசிஐ அவருக்கு ஊதியம் வழங்கும்.
விளையாட்டு வீரர் அல்லாத இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் யாரும் பிசிசிஐ-யின் நடவடிக்கைகளில் எவ்விதத்திலும் தலையிடக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஐபிஎல்-லின் இப்போதைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் ராமன் அப்பதவியில் தொடருவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் காவஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக என்.சீனிவாசன் பொறுப்பேற்க இருக்கிறார்.
இதற்கு அனுமதிக்க வேண்டுமென்று பிசிசிஐ சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக நீதி மன்றம் எந்த உத்தரவையும் பிறப் பிக்கவில்லை.
இந்த வழக்கில் பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, ‘இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலை வர் பதவியில் இருக்கிறார். அவருக்கும் முறைகேடுகளில் தொடர்பு உண்டு. முத்கல் கமிட்டி விசாரணையின்போது குருநாத் மெய்யப்பனுக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று தவறான தகவலை அளித்தார்’ என்றும் சால்வே குற்றம்சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பிசிசிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம் திட்டவட்டமாக மறுத்தார். நீதி மன்றத்தில் சால்வே தவறான தக வல்களை அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சிறப்பாக செயல்படுவேன்: காவஸ்கர்
பிசிசிஐ தலைவர் பதவியில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன் என்று சுநீல் காவஸ்கர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் பிசிசிஐ இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது: உச்ச நீதிமன்றம் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மரியாதையுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை பிசிசிஐ இடைக்காலத் தலைவராக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன். நான் மிகவும் விரும்பும் கிரிக்கெட்டுக்கு கூடுதல் சேவையாற்ற கிடைத்துள்ள வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT