Published : 21 Mar 2014 08:23 PM
Last Updated : 21 Mar 2014 08:23 PM
டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
131 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவாண் மற்றும் ரோஹித் சர்மா ஆடினர். சில பவுண்டரிகள் அடித்தாலும் ஷிகர் தவாண் தடுமாற்றத்துடனே காணப்பட்டார். உமர் குல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்த தவாண் அடுத்த பந்திலேயே அஜ்மலிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களுக்கு வெளியேறினார்.
முதல் சில ஓவர்களில் நிதானித்து, பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, தனது ஆட்டத்தில் இரண்டு சிக்ஸர்களையும் விளாசினார். ஆனால், சயீத் அஜ்மல் வீசிய சுழற்பந்தை சரியாக கணிக்காமல் 24 ரன்களுக்கு ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங், ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பிலாவல் பட்டி வீசிய பந்தில் பவுல்டாகி ஏமாற்றமளித்தார்.
ஹபீஸ் வீசிய பந்தில் ரெய்னா கொடுத்த கேட்ச்சை அப்ரிதி தவறவிட்டார். பட்டி வீசிய அடுத்த ஓவரிலேயே ரெய்னா இரண்டு பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் விராட் கோலியும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
பாரபட்சமின்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் ரெய்னா - கோலி இணை எளிதாக சமாளித்து ஆடியது. கடைசி இரண்டு ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உமர் குல் வீசிய 19-வது ஓவரில் ரெய்னா ஒரு சிக்ஸர் மற்றும் 1 ரன் அடிக்க, 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்தியா இந்தப் போட்டியை வென்றது.
விராட் கோலி 32 பந்துகளில் 36 ரன்களும், ரெய்னா 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பெட் செய்ய பாகிஸ்தானை அழைத்தது. துவக்க ஆட்டக்காரர் கம்ரான் அக்மல் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். அகமது ஷெஹாத் 22 ரன்களையும், முகமது ஹஃபீஸ் 15 ரன்களையும் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து, நிதானமாக பேட் செய்த உமர் அக்மல் 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ஷோயிப் மாலிக் 18 ரன்கள் எடுத்தார்.
அதிரடி பேட்ஸ்மேன் அஃப்ரிதி 10 பந்துகளில் 8 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஷோயிப் மக்சூத் 21 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஷோயப் மக்சூத் மிகச் சிறப்பாக விளாசி 15 ரன்கள் சேர்த்ததால், பாகிஸ்தானின் ரன் எண்ணிக்கை ஓரளவு கூடியது.
இறுதியில், பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப்போட்டியில் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, மூன்று கேட்ச்களை பிடித்தது கவனிக்கத்தக்கது.
இந்தியா தனது அடுத்த போட்டியில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை மார்ச் 23-ஆம் தேதி சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT