Published : 22 Feb 2014 11:17 AM
Last Updated : 22 Feb 2014 11:17 AM

டெல்லி ஓபன்: அரையிறுதியில் சோம்தேவ்

டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். அதேநேரத்தில் இந்திய வீராங்கனையான அங்கிதா ரெய்னா போராடி தோல்வி கண்டார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சோம்தேவ், சீனாவின் ஜீ ஜங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை சோம்தேவ் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஜீ ஜங்கின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் 2-வது செட்டில் விளையாட முடியவில்லை. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து சோம்தேவ் அரையிறுதியை உறுதி செய்தார். இந்த சீசனில் தொடர்ந்து 3-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் சோம்தேவ். முன்னதாக சென்னை மற்றும் கோல்கத்தா போட்டிகளில் அவர் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்துப் பேசிய சோம்தேவ், “ஜீ ஜங்குக்கு காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானதாகும். சீனாவின் தலைசிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவர் திறமையான ஃபோர் ஹேண்ட் வீரர். எனினும் வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

2010-ல் சீனாவின் குவாங்ஜௌவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜீ ஜங்கை வீழ்த்தியதை நினைவு கூர்ந்த சோம்தேவ், “சீனாவில் அந்நாட்டு வீரருக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமானதாகும். நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் விளையாடியிருப்பது நகைச்சுவையான போட்டியாகும். இந்த ஆண்டின் எஞ்சிய பகுதி ஜீ ஜங்கிற்கு சிறந்ததாக அமைய எனது வாழ்த்துகள்” என்றார்.

அங்கிதா அவுட்

மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் 3-ம் நிலை வீராங்கனையான அங்கிதா ரெய்னா 3-6, 5-7 என்ற நேர் செட்களில் உக்ரைனின் யூலியா பெய்ஜெல்ஸிமரிடம் தோல்வி கண்டார். 2 மணி நேரம், 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் அங்கிதா கடுமையாகப் போராடியபோதும் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x