Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
பொதுவாக இந்தியாவுக்கு விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை, நம்மூரில் கொளுத்தும் வெயிலும், உணவு வகைகளும்தான்.
ஆனால் ஆனந்தை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கார்ல்சனுக்கு தென்னிந்திய மசாலா உணவு வகைகள் மனம் கவர்ந்ததாகிவிட்டன. வெற்றிக்குப் பின் அளித்த பேட்டியில் அவரை இதைத் தெரிவித்துள்ளார்.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியைப் பொருத்தவரையில் ஒரு வீரருக்கு சுகவீனம் ஏற்பட்டால், இருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு போட்டியில் தொடர அனுமதி உண்டு. இப்படி ஒருநிலை தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக உள்ளூர் உணவுகளை உண்ணாமல், கார்ல்சன் தவிர்த்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை ஹோட்டலில் தங்கியிருந்த கார்ல்சன் அங்கு தயாரிக்கப்பட்ட தென்னிந்திய உணவு வகைகளை ஒருபிடி பிடித்ததுடன், அதன் சுவைக்கு ரசிகராகவும் மாறிவிட்டார்.
சுமார் ஒருமாதம் சென்னையில் தங்கியிருந்த கார்ல்சன் அங்கு அடிக்கும் வெயிலால் ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கிவிடவும் இல்லை. சென்னை சாந்தோம் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வந்து கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து விளையாட்டுகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.
கார்ல்சனுடன் அவரது குடும்பமும் சென்னைக்கு வந்து உற்சாகமூட்டியது. எனினும் அவர்கள் சென்னையில் ஒன்றாக எந்த இடத்துக்கும் செல்லவில்லை.
சாம்பியன் பட்டம் வென்றபின் அளித்த பேட்டியில் தனது வெற்றிக்கு குடும்பத்தினரும் முக்கியக் காரணமாக இருந்தனர் என்பதை அழுத்தமாக குறிப்பிட்ட கார்ல்சன், தனது தந்தை ஹென்றிக் கொடுத்த யோசனைகள் உதவிகரமாக இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.
சென்னை குறித்த தனது அனுபவத்தை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட ஹென்றிக், சென்னை என்றால் வெயில் அதிகமாக இருக்கும் என்றுதான் தெரிந்து வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் சென்னையில் இருந்த காலத்தில் இங்கு மழைதான் அதிகம் பெய்தது. எனவே பருவநிலையால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. சென்னை வந்தது உற்சாகமான அனுபவமாகவே இருந்தது என்றார்.
இறுதியாக இந்தியாவுக்கும், குறிப்பாக சென்னைக்கும் கார்ல்சன் நன்றி தெரிவித்தார். அப்போது, இங்கு கிடைத்ததுபோன்ற சிறப்பான உபசரிப்பை இதுவரை வேறு எங்கும் பெற்றதில்லை என்று கூறி தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு நற்சான்றிதழ் அளித்தார்.
கார்சல்சனின் வெற்றிக்குப் பின் ஹோட்டலில் கொண்டாட்டமே பல மணி நேரம் நடைபெற்றது. உற்சாக வெள்ளத்தில் இருந்து உறவினர்கள் கார்ல்சனை நீச்சல் குளத்தில் தூக்கி வீசியும் அழகு பார்த்தனர். அன்று கார்ல்சன் தூக்கச் சென்றபோது நேரம் அதிகாலை 5 மணி.
இறுதியாக ஒரு தகவல், உறவினர்கள், நண்பர்கள், மேலாளர்கள், உதவியாளர்கள் என கார்சல்சனுடன் நார்வேயில் இருந்து சென்னைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் மேல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT