Published : 08 Mar 2014 11:29 AM
Last Updated : 08 Mar 2014 11:29 AM

சந்தோஷ் டிராபி: இறுதிச்சுற்றில் மிசோரம்

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மிசோரம் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. 68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தமிழகமும், மிசோரமும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல்பாதி ஆட்டத்தின் “இஞ்சுரி” நேரத்தில் (45+1) தமிழக அணி கோல் அடித்தது. இந்த கோலை ஸ்டிரைக்கர் ரீகன் அடித்தார்.

இதன்பிறகு 2-வது பாதி ஆட்டத்தின் 61-வது நிமிடம் வரை தமிழகமே முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 62-வது நிமிடத்தில் மிசோரமின் மாற்று ஆட்டக்காரரான டேவிட் 35 “யார்ட்” தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தையடித்தார். எளிதாக தடுக்கக்கூடிய அந்த பந்தை கோல் கீப்பர் அருண் பிரதீப் கோட்டைவிட அது கோலானது. அதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பிறகு மிசோரம் உத்வேகம் பெற்றது. அதேநேரத்தில் தமிழக கோல் கீப்பர் மட்டுமின்றி, எஞ்சிய வீரர்களும் நம்பிக்கையை இழந்தனர். ஆட்டநேர முடிவில் ஸ்கோர் சமநிலையில் இருந்ததால், வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதில் அபாரமாக ஆடிய மிசோரம் அணி 94 மற்றும் 119-வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்தைத் தோற்கடித்தது. மிசோரமின் இரண்டாவது கோலும் அருண் பிரதீப்பின் தவறாலேயே கிடைத்தது. பந்தைத் தவறாகக் கணித்து 6 அடி “பாக்ஸ்” பகுதிக்கு அருண் முன்னேறி வர மிசோரம் எளிதாக கோலடித்தது. மிசரோமின் 2-வது கோலை ஜிகோவும், 3-வது கோலை லால்ரின்புயாவும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பிரதான சுற்றில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த மிசோரம், முதல்முறையாக சந்தோஷ் டிராபியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x