Published : 06 Mar 2014 10:32 AM
Last Updated : 06 Mar 2014 10:32 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.
வங்கதேசத்தின் மிர்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, ஆப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார். ஆப்கானிஸ்தானின் நூர் அலி ஜாத்ரன்-நவ்ரோஸ் மங்கள் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. நவ்ரோஸ் மங்கள் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு ஆப்கானிஸ்தானின் சரிவு தவிர்க்க முடியாததானது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரை சமாளிக்க முடியாமல் மள மள வென சரிந்தது ஆப்கானிஸ்தான். 3-வது வீரராக களமிறங்கிய ரஹ்மத் ஷா 9 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நூர் அலி 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த அக்ஸார் ஸ்டானிக்சாய், நஜிபுல்லா ஜாத்ரன் ஆகியோர் தலா 5 ரன்களிலும், கேப்டன் முகமது நபி 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முகமது ஷாசத் 22 ரன்களில் ஆட்டமிழக்க, 8-வது பேட்ஸ்மேனான சமியுல்லா ஷென்வாரி அரைசதமடித்தார். அவர் அதே ரன்களோடு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 45.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அவரும், ஷிகர் தவணும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 23.3 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தனர். 66 பந்துகளைச் சந்தித்த ரஹானே 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா களம்புகுந்தார்.
அடுத்த ஓவரில் ஷிகர் தவண் ஆட்டமிழந்தார். அவர் 78 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரோஹித்துடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி சிறப்பாக ஆட 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. ரோஹித் 18, தினேஷ் கார்த்திக் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கோப்பையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான இந்தியா, இறுதிச்சுற்று வாய்ப்பை கோட்டைவிட்ட நிலையில், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT