Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: பெனாய்ட் பேருடன் களமிறங்குகிறேன்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேரும், நானும் இணைந்து விளையாட திட்டமிட்டிருக்கிறோம் என ஸ்விட்சர்லாந்து வீரரும், இரட்டையர் நடப்பு சாம்பியனுமான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தெரிவித்துள்ளார்.

2011-ல் நடைபெற்ற சென்னை ஓபனில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, கடந்த சென்னை ஓபனில் காலிறுதியோடு வெளியேறியபோதும், இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் பெனாய்ட் பேருடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு 2013-ல் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் (ஒற்றையர் பிரிவில்) சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓபனில் காலிறுதி வரையும், அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரையும் முன்னேறினார். அதன் எதிரொலியாக கடந்த அக்டோபரில் தனது அதிகபட்ச தரவரிசையை (8-வது இடம்) எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலக டூர் பைனல்ஸில் முதல் முறையாக பங்கேற்ற வாவ்ரிங்கா, அதிலும் அரையிறுதி வரை முன்னேறினார். இந்த நிலையில் வரும் 30-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள சென்னை ஓபனில் பங்கேற்கிறார் வாவ்ரிங்கா. தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்கவுள்ள வாவ்ரிங்கா, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து இ-மெயில் மூலம் “தி இந்து”வுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

2013-ம் ஆண்டில் ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்திருக்கிறீர்கள். வரும் சீசனில் (2014-ம் ஆண்டு) உங்களின் இலக்கு என்ன? 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் எப்படியிருக்கும்?

இந்த ஆண்டைப் போலவே அடுத்த சீசனிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இந்த ஆண்டு ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியதால், எல்லா போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெறமுடியும் என நினைக்கக்கூடாது. அடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேற விரும்புகிறேன் என்று கூறினால் அது ஆணவத்தில் பேசுவது போன்றதாகும். 2014 சீசனில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

2014 சென்னை ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் மற்றும் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் பங்கேற்கின்றனர். இந்த முறை போட்டி எப்படியிருக்கும்? இதில் உங்களின் திட்டம்?

ஏடிபி டென்னிஸில் சென்னை ஓபன் எப்போதுமே எனக்குப் பிடித்த போட்டியாகும். நான் சென்னையில் விளையாடுவதை எப்போதுமே விரும்புகிறேன். அங்குள்ள பிரதான மைதானத்தில் (சென்டர் கோர்ட்) விளையாடும்போது ரசிகர்கள் எனக்கு அளிக்கும் ஆதரவு அளவிட முடியாதது. வரும் சென்னை ஓபனில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இந்த முறை எதிர்வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

6-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்கவிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் உங்களுக்கு மறக்க முடியாத போட்டி எது?

2011 சென்னை ஓபனில் ஒற்றையர் பிரிவிலும், 2013 சென்னை ஓபனில் என்னுடைய நெருங்கிய நண்பரான பிரான்ஸின் பெனாய்ட் பேருடன் இணைந்து இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றேன். இந்த இரு ஆண்டுகளுமே என்னால் எப்போதுமே மறக்க முடியாத மிகச்சிறந்த தருணமாகும்.

2014 சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறீர்களா? அப்படியானால் இந்த முறை யாருடன் இணைந்து களமிறங்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆம். இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறேன். கடந்த முறை நானும், பெனாய்ட் பேரும் இணைந்து பட்டம் வென்றதோடு நல்ல அனுபவத்தையும் பெற்றோம். அதனால் இந்த முறையும் நானும், பெனாய்ட் பேரும் மீண்டும் இணைந்து விளையாட திட்டமிட்டிருக்கிறோம்.

சென்னை நகரை நீங்கள் விரும்புகிறீர்களா? சென்னையில் உங்களுக்குப் பிடித்த இடம் எது?

இந்திய உணவு வகைகளை ருசிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவைகள் மிகவும் சுவையானவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த பல்வேறு வகையான நறுமணப் பொருள்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இந்திய மக்கள் மிகவும் நட்புடன் பழகுவார்கள். அங்கு எப்போதுமே பிரமாண்டமான வரவேற்புக்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும் குறைவிருக்காது என வாவ்ரிங்கா குறிப்பிட்டுள்ளார்.

மிகச்சிறந்த “பேக் ஹேண்ட்” வீரர்களில் ஒருவரான வாவ்ரிங்கா, ஒற்றையர் பிரிவில் சென்னை ஓபன் உள்ளிட்ட 4 ஏடிபி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதேபோல் இரட்டையர் பிரிவில் இரு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள வாவ்ரிங்கா, களிமண் ஆடுகளங்களில் சிறப்பாக ஆடும் ஆற்றல் பெற்றவர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சகநாட்டவரான ரோஜர் ஃபெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றது வாவ்ரிங்காவின் டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய மணிமகுடமாகும்.

கடந்த ஆஸ்திரேலிய ஓபனின் 4-வது சுற்றில் அப்போதைய உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தோற்றது வாவ்ரிங்காவின் போராட்ட குணத்துக்கும், ஆற்றல்மிகு ஆட்டத்துக்கும் சிறந்த உதாரணமாகும்.

வாவ்ரிங்கா ஒரு கையால் “பேக் ஹேண்ட்” ஷாட்களை அடிப்பதைப் பார்த்து வியந்த முன்னாள் முதல்நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் மெக்கன்ரோ, “மிகுந்த ஆற்றல் வாய்ந்த “பேக் ஹேண்ட்” டென்னிஸ் வீரர்களில் வாவ்ரிங்காவும் ஒருவர். இன்றைய டென்னிஸ் உலகின் தலைசிறந்த “பேக் ஹேண்ட்” வீரர் வாவ்ரிங்காதான்” என குறிப்பிட்டிருப்பது வாவ்ரிங்காவின் “பேக் ஹேண்ட்” ஆட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x