Published : 18 Oct 2013 01:28 PM
Last Updated : 18 Oct 2013 01:28 PM

உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் விஜேந்தர் சிங்

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் (75 கிலோ எடைப் பிரிவு) 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

விஜேந்தர் சிங் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும்கூட, தனது முதல் சுற்றில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்வீடனின் ஹேம்பஸ் ஹென்ரிக்சனை தோற்கடித்தார். இந்தப் போட்டியின் மூன்று சுற்றுகளையும் விஜேந்தர் சிங் முறையே 30-27, 30-26, 30-26 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

2009 உலக சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக பங்கேற்ற விஜேந்தர் சிங், அதில் வெண்கலம் வென்று, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

முதல் சுற்றில் வெற்றி கண்டது குறித்துப் பேசிய விஜேந்தர் சிங், “நான் இங்கு வந்தது முதலே காய்ச்சல், ஜுரம், இருமல் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படியோ அதையெல்லாம் சமாளித்து முதல் சுற்றில் வெற்றி கண்டிருக்கிறேன். வெற்றியோடு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த இரு நாள்களாக தியானம் செய்தேன். முதல் சுற்றில் நான் களமிறங்குவதற்கு முன்னதாக என்னை சந்தித்த எனது பயிற்சியாளர், மனரீதியாக பலவீனமாக இருப்பதாக உணர வேண்டாம். உடல்ரீதியாக எப்படியிருந்தாலும் அது ஒரு பிரச்சினையே அல்ல என என்னிடம் கூறினார். அதனால் நான் நேர்மறையான எண்ணத்தோடு முதல் சுற்றில் விளையாடி வாகை சூடியிருக்கிறேன்” என்றார்.

இந்திய அணியின் பயிற்சியாளரான குர்பாக் சிங் சாந்து கூறுகையில், “உலகின் முன்னணி வீரருக்கு எதிராக விஜேந்தர் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார்.

விஜேந்தர் சிங் தனது 2-வது சுற்றில் ஐரோப்பிய சாம்பியனும், உலகின் 7-ம் நிலை வீரருமான அயர்லாந்தின் ஜேசன் கிக்லேவை சந்திக்கவுள்ளார். சனிக்கிழமை நடைபெறும் இந்த சுற்று விஜேந்தருக்கு மிகக் கடினமான சுற்றாக இருக்கும்.

இந்தியாவின் விகாஸ் மாலிக் (60 கிலோ), மன்தீப் ஜங்ரா (69 கிலோ) ஆகியோர் ஏற்கெனவே 2-வது சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இப்போது விஜேந்தர் சிங் முதல் சுற்றைத் தாண்டியுள்ளார்.

ஆசிய சாம்பியன் சிவ தாபா (56 கிலோ), தக்கோம் நானோ சிங் (49 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ) ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற மன்பிரீத் சிங் (91 கிலோ) ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் மன்பிரீத் சிங், செசல்ஸின் கெட்டி ஆக்னெஸையும், மனோஜ் குமார், துருக்கியின் பேடிக் கெலஸையும் சந்திக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x