Published : 02 Jan 2014 12:26 PM
Last Updated : 02 Jan 2014 12:26 PM

சென்னை ஓபன்: மிக்கேல் யூஸ்னி விலகல்

“சென்டர் கோர்ட்” டில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மிக்கேல் யூஸ்னியும், 73-வது இடத்தில் உள்ள இஸ்ரேலின் டூடி செலாவும் மோதினர். விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 2-வது கேமிலேயே யூஸ்னியின் சர்வீஸை முறியடித்தார் டூடி செலா. இதை சற்றும் எதிர்பாராத யூஸ்னி, அடுத்த கேமில் டூடி செலாவின் சர்வீஸை “பிரேக்” செய்து பதிலடி கொடுத்தார்.

ஆனால் அடுத்த கேமில் யூஸ்னியின் சர்வீஸை முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் டூடி செலா. 5-வது கேம் நடைபெற்றபோது வயிற்று கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகினார் மிக்கேல் யூஸ்னி.இதையடுத்து டூடி செலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ரோஜர் வேஸலினை சந்திக்கிறார் டூடி செலா. ரோஜர் வேஸலின் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜிரி வெஸலைத் தோற்கடித்தார்.

போட்டியிலிருந்து விலகியது குறித்து யூஸ்னி கூறுகையில், “வயிற்றுக் கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகியிருக்கிறேன். இங்கு விளையாட விரும்பினாலும், முழு ஆற்றலை வெளிப்படுத்தி ஆட முடியவில்லை. என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. உடல் ஒத்துழைக்காதபோது இங்கு விளையாடுவதால் எந்த பயனும் கிடைக்காது. தோல்வியே மிஞ்சும்.

கடந்த வாரம் தாய்லாந்தில் இருந்தபோதே இந்த வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. அது இந்த வாரத்திலிருந்து தொடர்ந்ததால் இப்போது நான் விலக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக போட்டி அமைப்பாளர்களிடமும், சென்னை ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

குரேஷிய ஜோடியின் அதிர்ஷ்டம்

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடவிருந்தார் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி. திடீரென பாக்னினியின் இடது காலில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் இரட்டையர் பிரிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பயஸும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பயஸ் ஜோடிக்குப் பதிலாக வேறு ஜோடி அறிவிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வேறு ஜோடி கிடையாது என புதன்கிழமை அறிவிக்கப்பட்டதால் பயஸ் ஜோடியை எதிர்த்து விளையாடவிருந்த குரேஷியாவின் மரின் டிராகன்ஜா-மேட் பேவிச் முதல் சுற்றில் விளையாடாமலேயே காலிறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x