Published : 28 Mar 2014 10:12 AM
Last Updated : 28 Mar 2014 10:12 AM
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் நிஷிகோரி 3-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஃபெடரரைத் தோற்கடித்தார். ஃபெடரருக்கு எதிராக நிஷிகோரி பெற்ற 2-வது வெற்றி இது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை வென்ற ஃபெடரர், 2-வது செட்டின் தொடக்கத்தில் நிஷிகோரியின் இரு சர்வீஸ்களை முறியடித்ததால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அபாரமாக ஆடிய நிஷிகோரி ஃபெடரரின் சர்வீஸ்களை அடுத்தடுத்து முறியடித்து 7-5 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டிலும் அபாரமாக ஆடிய நிஷிகோரி, ஆட்டத்தின் போக்கை மாற்றி அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஃபெடரரை வீழ்த்தினார்.
கடந்த இரண்டு தினங்களில் சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் இரு வீரர்களை தோற்கடித்துள்ளார் சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த நிஷிகோரி, இப்போது 5-ம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, “ஃபெடரரை 2-வதுமுறையாக தோற்கடித்திருக்கிறேன். இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடியதாக நினைக்கிறேன். குறிப்பாக 2-வது செட்டில் சிறப்பாக ஆடினேன். சில தருணங்கள் கொஞ்சம் கடினமாக இருந்தன. எனினும் நான் கடுமையாகப் போராடி வெற்றி கண்டிருக்கிறேன்” என்றார்.
இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ரோஜர் ஃபெடரர், மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முழு பார்முடன் களமிறங்கினார். இந்தப் போட்டியில் காலிறுதிக்கு முன்பு வரை ஒரு செட்டைக்கூட இழக்காத ஃபெடரர், தனது 4-வது சுற்றில் முன்னணி வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை 49 நிமிடங்களில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்துப் பேசிய ஃபெடரர், “எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. இந்த வாரம் முழுவதும் நான் சிறப்பாக ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் தோல்வி கண்டது ஆச்சரியமாக இருக்கிறது. நான் முதல் செட்டை வென்ற நிலையில், அடுத்தடுத்து இரு செட்களை இழந்தது மனஉளைச்சலை ஏற்படுத்தியது. 2 மற்றும் 3-வது செட்களில் நிஷிகோரி அபாரமாக ஆடினார். எனவே அனைத்து பாராட்டுகளும் அவருக்குத்தான்” என்றார்.
வீழ்ந்தார் முர்ரே
மற்றொரு காலிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் முர்ரேவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜோகோவிச்.
வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “முர்ரே விளையாடியவிதம் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் சிறப்பாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் ஆடுவார் என எதிர்பார்த்தேன். சரியான பகுதியில் பந்தை அடிக்கவிடாமல் முர்ரேவை தடுக்க முயற்சித்தேன். ஏனெனில் அவர் சரியான இடத்தில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் எவ்வித சிக்கலுமின்றி சிறப்பாக ஆடுவார். அப்போது அவருடைய ஆட்டம் உலகின் தலைசிறந்த ஆட்டமாகக்கூட இருக்கலாம்” என்றார்.
அக்னீஸ்கா அவுட்
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 3-6, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவைத் தோற்கடித்தார்.
போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிபுல்கோவா, இந்தப் போட்டிக்குப் பிறகு புதிய தரவரிசை வெளியிடப்படும்போது சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவார்.வெற்றி குறித்துப் பேசிய சிபுல் கோவா, “நான் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்பது ஏற்கெனவே தெரியும். அதனால் அதிக அளவில் நெருக்கடி இருந்தது. எனினும் அதை சிறப்பாகக் கையாண்டவிதம் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சிபுல்கோவா அடுத்ததாக சீனாவின் லீ நாவை சந்திக்கிறார். லீ நா தனது காலிறுதியில் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின்வோஸ்னியாக்கியை தோற்கடித்தார்.ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும், இன்டியன்வெல்ஸ் போட்டியின் காலிறுதியிலும் லீ நாவிடம் தோல்வி கண்ட சிபுல்கோவா, இந்த முறை அதற்கு பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT