Published : 24 Oct 2013 12:10 PM
Last Updated : 24 Oct 2013 12:10 PM

4-வது ஒருநாள் போட்டி: விளையாடியது மழை

இந்திய ஆஸ்திரேலிய அணி களுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு ஜெயதேவ் உனட்கட், முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

முகமது சமி அபாரம்

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆரோன் பிஞ்சும், பில் ஹியூஸும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். ஆரோன் பிஞ்சை (5 ரன்கள்), தான் வீசிய முதல் ஓவரிலேயே (ஆட்டத்தின் 2-வது ஓவர்) கிளீன் போல்டாக்கினார் முகமது சமி. தொடர்ந்து ஆட்டத்தின் 6-வது ஓவரை வீசிய முகமது சமி, பில் ஹியூஸை 11 ரன்களில் வெளியேற்றினார். ஆஸ்திரேலியா 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது சமி பந்துவீச்சில் ஷேன் வாட்சன் (14 ரன்கள்) ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

பெய்லி, மேக்ஸ்வெல் அதிரடி

இதையடுத்து கேப்டன் பெய்லியும், ஆடம் வோஜஸும் ஜோடி சேர்ந்தனர். ஆஸ்திரே லியா 71 ரன்களை எட்டியபோது வோஜஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 16 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து பெய்லி யுடன் இணைந்தார் கிளன் மேக்ஸ்வெல். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, பின்னர் அதிரடியில் இறங்கியது. பெய்லி 57 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், ஜடேஜா ஓவரில் சிக்ஸர் அடித்து 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். பெய்லியும் வேகம் காட்டவே, 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

அந்த அணி 224 ரன்களை எட்டியபோது பெய்லியின் விக்கெட்டை இழந்தது. அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், வினய் குமார் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். 94 பந்துகளைச் சந்தித்த பெய்லி 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்தார். பெய்லி-மேக்ஸ்வெல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.

அந்த அணி 224 ரன்களை எட்டியபோது பெய்லியின் விக்கெட்டை இழந்தது. அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், வினய் குமார் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். 94 பந்துகளைச் சந்தித்த பெய்லி 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்தார். பெய்லி-மேக்ஸ்வெல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.

பின்னர் வந்த பிராட் ஹேடின் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் வினய் குமார் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். 77 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த ஜான்சன் 25 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், வினய் குமார், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஒன்றல்ல, 6

இந்தப் போட்டியில் இந்திய வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக அமைந்தது. இதனால் ஜார்ஜ் பெய்லி இரு முறையும் (0, 35 ரன்களில்), கிளன் மேக்ஸ்வெல் இரு முறையும் (44, 69 ரன்களில்), ஜான்சன் 15 ரன்களிலும் கொடுத்த கேட்ச்சை என் மொத்தம் 6 கேட்சுகளை கோட்டை விட்டனர்.

மீண்டும் மழை

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ரோஹித் சர்மா 9, ஷிகர தவண் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து கனமழை பெய்ததால், மைதானம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இரவு 8.35 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

பெய்லி சாதனை

இந்தப் போட்டியில் 98 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி, இந்தத் தொடரில் இதுவரை மொத்தம் 318 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையை பெய்லி பெற்றார். முன்னதாக 2009-ல் இந்தியாவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங் 267 ரன்கள் எடுத்திருந்ததே ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.

செளரவை சமன் செய்த தோனி

இந்தப் போட்டியோடு சேர்த்து இந்திய அணிக்கு 146 ஒருநாள் போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இதன்மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்கள் வரிசையில் சௌரவ் கங்குலியுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் தோனி. முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் முதலிடத்தில் உள்ளார். அவர் 172 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x