Published : 27 Nov 2013 06:39 PM
Last Updated : 27 Nov 2013 06:39 PM
தனது இளம் வயதில் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர் கொடுத்த நாணயங்கள் விலை மதிக்க முடியாதது என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
Collectabilia.com என்ற வர்த்தக ரீதியிலான இணையதளம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. காபி டேவுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் டான் பிராட்மேன், சச்சின் உள்ளிட்ட பல்வேறு ஜாம்பவான்களால் கையெழுத்திடப்பட்ட பல்வேறு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இதை மும்பையில் சச்சின் புதன்கிழமை தொடங்கி வைத்தார். உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசுப் பொருள்களில் முக்கியமானது எது என அப்போது சச்சினிடம் கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
"சிறு வயதில் நான் ஜிம்கான மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது எனது பயிற்சியாளராக இருந்த ரமாகாந்த் அச்ரேக்கர், நான் பேட் செய்யும்போது எனது ஸ்டெம்புக்கு மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைப்பார். நான் எதிர்கொள்ளும் பந்தில் அவுட்டாகவிட்டால் அந்த நாணயத்தை நான் எடுத்துக் கொள்ளலாம். அப்படி நான் சேகரித்த நாணயங்கள் விலை மதிக்க முடியாதவை. அவையனைத்தும் எனக்கு மிக முக்கியமானவை" என்றார்.
மேலும் அந்த இணையத்தில், சச்சினின் 200-வது டெஸ்ட் போட்டி கொண்டாட்ட "ஆட்டோகிராப்" இடப்பட்ட பேட், பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் "ஆட்டோகிராப்" இடப்பட்ட கையுறை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இவற்றைப் பார்த்த சச்சின், அலியின் கையுறையும் அவரது பாந்த்ரா பங்களாவில் உள்ள முகமது அலியின் கையுறையும் ஒரே மாதிரியானவை என்றும், அது தனக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசுப் பொருள் என்றும் கூறினார். இதோடு, டான் பிராட்மேன் தனக்கு வழங்கிய படமும், அவர் கையெழுத்திட்ட பேட்டும் மதிப்புமிக்கவை என சிலாகித்துக் கூறினார்.
"கிரிக்கெட் தவிர மோட்டார் ஸ்போர்ட்ஸ், கால்பந்து மற்றும் இசையும் எனக்கு பிடிக்கும். பிரிட்டன் இசை வல்லுநர் நாப்ளர் மற்றும் எனது சிறந்த நண்பர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், அவர்களது சொந்த கிட்டார்களை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். நான் வைத்திருக்கும் இசை உபகரணங்களில் அவை மிக உயர்ந்தது, அன்புக்குரியதும் கூட. என்னை தனது மகனாக பாவிக்கும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் எனக்கு பரிசுப்பொருள் தருவதாக உறுதியளித்துள்ளார். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என சச்சின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT