Published : 05 Feb 2014 11:37 AM
Last Updated : 05 Feb 2014 11:37 AM

சங்ககாரா 34-வது சதம்; இலங்கை 314/5

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 92 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது.

34-வது சதத்தைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா 160 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் சில்வா 11, கருணாரத்னே 31 ரன்களில் வெளியேற, குமார் சங்ககாராவும் ஜெயவர்த்தனாவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.

ஜெயவர்த்தனா 147 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சங்ககாரா டெஸ்ட் போட்டியில் தனது 34-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் வந்த சன்டிமல் 27, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 92 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. சங்ககாரா 245 பந்துகளில் 3 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 160 ரன்களுடனும், விதாஞ்சே ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கவாஸ்கரை சமன் செய்த சங்ககாரா

இந்தப் போட்டியில் சதமடித்ததன் மூலம் தனது 34-வது சதத்தைப் பூர்த்தி செய்த சங்ககாரா, டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் முன்னாள் இந்திய கேப்டன் சுநீல் கவாஸ்கர், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோருடன் 5-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது 122-வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் சங்ககாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x