Published : 10 Oct 2013 04:01 PM
Last Updated : 10 Oct 2013 04:01 PM

200-வது டெஸ்டுடன் விடைபெறுகிறார் மாஸ்டர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் சச்சின் இப்போது ஓய்வு பெறுவாரா, அப்போது ஓய்வு பெறுவாரா என அவ்வப்போது முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்களால் எழுப்பப்பட்ட ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், அதைத் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

40 வயதாகும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற விரும்பும் தனது முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் சச்சின் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய கடந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அந்தக் கனவோடுதான் வாழ்ந்திருக்கிறேன். கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது என்பதுகூட எனக்கு கடினமான விஷயம்தான். ஏனெனில் நான் 11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் விளையாடியது மிகப்பெரிய கௌரவமாகும். தாய் மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு, கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆதரவளித்ததோடு, 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஓய்வு பெறுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் பொறுமையாக இருந்ததோடு, என்னை நன்கு புரிந்துகொண்ட எனது குடும்பத்தினருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துதலும், பிரார்த்தனையும்தான் நான் சிறப்பாக விளையாடக்கூடிய ஆற்றலையும், பலத்தையும் எனக்குத் தந்தது. அதற்காக அவர்கள் அனைவரும் பெரும் நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. எனினும் சச்சின் 200-வது டெஸ்ட் போட்டி அவருடைய சொந்த ஊரான மும்பையில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டி நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டை தனது சிறப்பான ஆட்டத்தால் கட்டிப்போட்டிருந்த சச்சின், பல்வேறு சாதனைகளை முறியடித்து, சர்வதேச அளவில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையோடு கிரிக்கெட் ரசிகர்களிடம் பிரியா விடைபெற இருக்கிறார். அவர் விட்டுச் சென்ற இடம், எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும். சச்சினுக்கு நிகர் அவர் மட்டுமே. இந்திய அணியில் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டிலும் அவரது இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.

பிராட்மேனின் பாராட்டு

கிரிக்கெட்டின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேன், சச்சின் பேட்டிங் செய்யும் ஸ்டைல் என்னைப் போன்றே உள்ளது என்று குறிப்பிட்டார். 1999-ம் ஆண்டு இது நடந்தது. அதைத்தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக சச்சின் கருதுகிறார்.

அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்த சச்சின், கராச்சியில் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அப்போது அவருக்கு வயது 16.

புன்னகைப் பூத்த குழந்தை முகம், சுருண்ட முடி இதுதான் சச்சினின் அப்போதைய அடையாளம். ஆனால் அவர் எதிர்கொண்ட பாகிஸ்தான் அணியோ, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் என புயல் வேகமிக்க வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருந்தது.

அந்தப் போட்டியில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து ஒன்று சச்சினின் முகத்தை பதம்பார்த்தது. ரத்தம் வழிந்தபோதும், அதை பொருட்படுத்தாமல் விளையாடிய சச்சின், பின்னாளில் உலகின் முன்னணி பௌலர்களை பந்தாடி, பதறவைத்தார்.

1990-ல் இங்கிலாந்தின் ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தலை சதம் (முதல் சதம்) கண்டார். 1991-92-ல் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த சச்சின், சிட்னி, பெர்த் மைதானங்களில் டெஸ்ட் ஆட்டங்களில் இரு சதங்களை விளாசி உலக கிரிக்கெட்டின் கதாநாயகனாக உருவெடுத்தார்.

இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 51 சதம், 67 அரை சதங்களுடன் 15,837 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 53.86 சதவீதம். அவர் குவித்துள்ள இந்த இமாலய ரன் சாதனையை முறியடிக்க, அவரின் சமகால வீரர்களோ அல்லது எதிர்காலத்தில் வரும் வீரர்களோ முறியடிப்பதற்கான வாய்ப்பு மிக.. மிக.. மிக.. குறைவுதான். டெஸ்ட் போட்டியில் 45 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 114 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

இரட்டைச் சதம் விளாசிய முதல்வன்

ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகம் கண்ட சச்சின், இதுவரை 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதம், 96 அரை சதங்களுடன் 18,426 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஓர் இரட்டைச் சதமும் அடங்கும். 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சச்சின், 140 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

2010 பிப்ரவரியில் அஹமதாபாதில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த சச்சின், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். டைம்ஸ் இதழ் வெளிட்ட 2010-ம் ஆண்டின் சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக அந்தப் போட்டி இடம்பிடித்தது.

உலக கிரிக்கெட் ரசிகர்களால் லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என அன்புடன் அழைக்கப்படும் சச்சின், பிராட்மேனுக்குப் பிறகு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக என்றுமே நினைவுகூரப்படக்கூடியவர்.

ராசியில்லாத கேப்டன் பதவி

மிகப்பெரிய பேட்ஸ்மேனாக ஜொலித்தாலும், கேப்டன் பதவி மட்டும் என்னவோ அவருக்கு ராசியானதாக அமையவில்லை. கேப்டன் பதவியையும் ஏற்ற இருமுறையுமே தோல்வியையும் நெருக்கடியையும் சந்தித்த சச்சின், அதன்பிறகு அதற்காக ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. அதனால் திராவிட், கங்குலி போன்றவர்களுக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. இளம் வீரர்களுக்கு கீழ் விளையாட அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. தோனி தலைமையின் கீழ் இந்திய அணிக்காக விளையாடியது. ரோஹித் சர்மா தலைமையின் கீழ் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடியது அதற்கு நல்ல உதாரணம்.

சச்சின் 5.5

களத்தில் இருக்கும் வரை எதிரணி பௌலர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்தவர் சச்சின். அவரின் அட்டகாசமான ஆட்டத்தால் மற்ற பேட்ஸ்மேன்கள் உத்வேகம் பெற்றதோடு, களத்தில் இருக்கும் நடுவர்கள்கூட நீண்ட நேர களத்தில் நிற்பதால் ஏற்படும் களைப்பை மறந்து மகிழ்ச்சியாக தங்கள் பணியை செய்துள்ளனர். 5 அடி 5 அங்குலம் கொண்ட சச்சின் மிகப்பெரிய உருவமும், உயரமும் கொண்டவர் இல்லையென்றாலும், யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளோடும், இனிய நினைவுகளோடும் விடைபெறவுள்ளார்.

இரண்டைத் தவிர…

1989-ல் பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் குவித்ததன் மூலம் உலகின் பார்வையில் தென்படத் தொடங்கிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் சாதனைகளில் இரண்டை தவிர மற்றவை அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு ஓய்வு பெறுகிறார். டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தது மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தது ஆகிய இரண்டு சாதனைகள் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் லாரா வசமுள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் 400, முதல் தர கிரிக்கெட்டில் 501 ரன்களும் ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார்.

>| உங்கள் நினைவுகளைப் பகிர - சச்சின் டெண்டுல்கரும் உங்கள் பகிர்வுகளும் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x